புது டில்லி: இந்தியாவின் 17-வது மக்களவைத் தேர்தல் தற்போது நடந்து வரும் வேளையில், பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவ்வகையில், கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி, மத்திய பிரதேசத்தில் உள்ள ஷாடோல் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, ராகுல் காந்தி பழங்குடியின மக்களுக்கு எதிரான சட்டம் குறித்து மோடியை விமர்சித்துப் பேசியுள்ளார். அதாவது, பழங்குடியின மக்களை சுட்டுக் கொல்ல பிரதமர் மோடி புதிய சட்டம் கொண்டுள்ளதாக அவர் அந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் கூறியுள்ளார்.
சர்ச்சையை ஏற்படுத்திய இந்த கருத்துக்கு, இந்திய தேர்தல் ஆணையம் அவருக்கு எச்சரிக்கை மனு ஒன்றினை அனுப்பியுள்ளது.
பழங்குடியின மக்களை சுட்டுக் கொல்ல பிரதமர் மோடி புதிய சட்டம் கொண்டுள்ளதாக ராகுல் தெரிவித்துள்ளார். அந்த சட்டத்தின் படி, பழங்குடியின மக்களை தாக்க, அவர்களின் நிலங்களை பறிக்க, வனங்களை விட்டு அவர்களை வெளியேற்ற, குடிநீரை அபகரிக்க, சுடவும் செய்யலாம் என அவர் பேசியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, பாஜக சார்பில் ராகுலின் இந்த ஆதாரமற்ற பேச்சுக்கு தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தேர்தல் விதிகளை மீறி எதிர்கட்சிகள் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை ராகுல் எழுப்பி வருவதாகவும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அப்புகாரில் கோரப்பட்டிருந்தது.
இதனை விசாரிக்க தேர்தல் ஆணையம் 48 மணி நேரத்தில் ராகுல் காந்தி உரிய விளக்கம் அளிக்காவிட்டால், மேற்கொண்டு அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து ராகுலுக்கு மனு ஒன்றினை அனுப்பியுள்ளது.