வாஷிங்டன்: கடந்த ஞாயிறன்று ஒளிபரப்பப்பட்ட கேம் அப் டுரோன்ஸ் (Game of Thrones), கற்பனை வரலாற்று தொடரில் தற்செயலாக ஸ்டார்பக்ஸ் (Starbucks) கோப்பை ஒன்று படப்பிடிப்பில் கவனிக்கப்படாததை குறிப்பிட்டு எச்பிஓ நிறுவனம் (HBO) நேற்று திங்கட்கிழமை அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், அது தற்செயலாக ஏற்பட்டு விட்டது என அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இந்த காட்சியைக் குறிப்பிட்டு இரசிகர்கள் சமூகப் பக்கங்களில் தொடர்ச்சியாக கேலி செய்து வந்ததைத் தொடர்ந்து எச்பிஓ இந்த அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
விண்டர்பேல் போரில், நோர்தெனெர்ஸ், நைட் கிங்கை தேற்கடித்து அந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில் ஒரு மேசையில் அமர்ந்து பானம் அருந்தும் காட்சியில், ஸ்டார்பக்ஸ் கோப்பை தென்படுகிறது. அந்தக் கோப்பை தற்கால வடிவமைப்பிலும், நெகிழி போன்று காட்சித் தந்ததால் இரசிகர்கள் மத்தியில் பல்வேறு விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஒரு கிளைக்கதைக்கு 15 மில்லியன் அமெரிக்க டாலர் வரையிலும் செலவாகும் இம்மாதிரியான படைப்புகளில், இது போன்ற சிறு சிறு கவனக் குறைவினால் ஏற்படும் தவறுகளை ஏற்க முடியாது என இரசிகர்கள் கூறி வருகின்றனர். இரசிகர்களின் தொடர்ச்சியான விமர்சனத்திற்கு எச்பிஓ அது தற்செயலாக நடந்து விட்டது என அறிக்கையின் வாயிலாகத் தெரிவித்துள்ளது.