Home இந்தியா தமிழகத்தில் உள்ள மத்திய அரசு பணியிடங்களில் தமிழர்களுக்கே இடமில்லை!- மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் உள்ள மத்திய அரசு பணியிடங்களில் தமிழர்களுக்கே இடமில்லை!- மு.க.ஸ்டாலின்

790
0
SHARE
Ad

சென்னை: சமீபத்தில் பொன்மலை ரயில்வே பணிமனையில் தொழிற்பயிற்சி (Apprenticeship) பெற நடைபெற்ற தேர்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்கள் அடியோடு புறக்கணிக்கப்பட்டு, வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அதிகமாக நியமிக்கப்பட்டுள்ள விவகாரத்தில், பாஜக மற்றும் அதிமுகவின் நிலையை கணக்கிடுமாறு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். இது தமிழர்களுக்கு இழைத்த துரோகம் என ஸ்டாலின் அறிக்கையின் வாயிலாகத் தெரிவித்துள்ளார்.

வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து விட்டு 80 இலட்சம் தமிழக இளைஞர்கள் பல ஆண்டுகளாக வேலையே கிடைக்காமல் கஷ்டத்தை எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் போது, இங்குள்ள மத்திய அரசு அலுவலகங்களிலும், அதன் பொதுத் துறை நிறுவனங்களிலும் வடமாநிலத்தவருக்கு அத்தனை வேலை வாய்ப்புகளையும் வழங்கும் நடவடிக்கையை கண்டிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த அலுவலகங்களில் நடைபெற்ற 2600 நியமனங்களில் 2300 பேர் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். வெறும் , 300 தமிழக இளைஞர்கள் மட்டுமே இதில் தேர்வாகி உள்ளனர் என தனது ஆதங்கத்தை அவர் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

இந்த நிகழ்வுகள் எல்லாம் தமிழ்நாட்டில் இருக்கும் வேலை இல்லாத திண்டாட்டத்தை மேலும் அதிகரிக்கும் ஆபத்தை ஏற்படுத்தியிருக்கிறது எனவும் மத்திய அரசு அலுவலகங்களில் உள்ள காலிப் பணியிடங்கள், புதிய பணியிடங்கள் எல்லாம் வட மாநிலத்தவருக்கே முழு குத்தகைக்கு விடப்பட்டு விட்டது எனவும் அவர் சாடினார்.

தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் தமிழர்களுக்கு 90 விழுக்காடு முன்னுரிமை என்பது உறுதி செய்யப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.