யங்கோன்: கடந்த 2017-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கைதான ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் இரண்டு நிருபர்கள் 500 நாட்களுக்கு பிறகு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
அரசு தகவல்களை வெளியிட்டதற்காக அவர்கள் இருவரும் யங்கோன் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். கடந்த செப்டம்பர் மாதம் வழங்கப்பட்ட தீர்ப்பில் ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு, 33 வயதான வா லோன் மற்றும் 29 வயதான யா சோ ஓ இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
மனித உரிமைகள் ஆணையத்தின் கேள்விகள் மற்றும் மியான்மாரின் ஜனநாயக அணுகுமுறை காரணமாக அவர்கள் 500 நாட்களுக்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதிபர் வின் மியிண்ட் கடந்த மாதம் சிறைக்கைதிகள் பலரை விடுதலை செய்ய அனுமதி அளித்தார்.
ராய்ட்டர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் இவ்விரண்டு நிருபர்களும் எந்த குற்றமும் செய்யவில்லை என்று கூறியிருந்தது.
இவ்விருவருக்கும் பத்திரிக்கை துறையின் உயரிய விருதான புலிட்சர் விருது கடந்த மே மாதம் வழங்கப்பட்டது.