புத்ராஜெயா: பல்வேறு இன மக்களின் ஆதரவு நம்பிக்கைக் கூட்டணி அரசுக்குத் தேவைப்படுவதாக பிரதமர் மகாதீர் முகமட் கூறினார். இவர்கள் அனைவரும் தற்போதைய அரசாங்கத்துடன் திருப்திகரமாக இருப்பதை உறுதி செய்ய கடுமையாக உழைக்க வேண்டும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
நேற்று புதன்கிழமை நம்பிக்கைக் கூட்டணியின் ஓராண்டு கால நிறைவை ஒட்டி ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு நேர்காணலில் பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.
“ஆனால் உண்மையில் நாம் எல்லா சமூகங்களுடனும் புரிந்து நடந்து கொள்கிறோம். ஒரு சிலருக்கு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ திருப்தி ஏற்படுகிறது” என அவர் கூறினார்.
“மலாய்க்காரர்களின் ஆதரவை இழந்துவிட்டால், நாங்கள் வீழ்ந்து விடுவோம். சீனர்களிடமிருந்து ஆதரவை இழந்துவிட்டாலும் நாங்கள் வீழ்ந்து விடுவோம். மேலும், நம்பிக்கைக் கூட்டணி வெற்றி பெறுவதற்கு இந்தியர்களின் பங்கு முக்கியமானதாக அமைந்து. அவர்களையும் கவனிக்க வேண்டும். இவ்விவகாரங்களில் நாங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்,” என்று அவர் கூறினார். .
“நாம் ஒற்றுமையைப் பற்றி நிறைய பேசுகிறோம், மலேசியர்களாக எல்லாவற்றையும் பற்றி பேசுகிறோம். ஆனால், எல்லோரும் தங்கள் சொந்த இனத்தைப்பற்றியே இன்னும் பேசுகிறார்கள். தங்கள் சொந்த இனத்தில் இருந்து ஆதரவு பெற விரும்பும் அமைச்சர்கள் இந்த பிரச்சினைகளை எழுப்புகிறார்கள்,” என்று பிரதமர் கூறினார்.
“மெட்ரிகுலேஷன் ஒதுக்கீடு முறை மற்றும் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் ரோம் சாசனம் போன்ற சர்ச்சைக்குரிய விவகாரங்களை, எதிர்கட்சியினர் மேற்கோளிட்டு, அவற்றைதிசை திருப்பிவிட்டார்கள்” என பிரதமர் கூறினார்.
“மலாய்க்காரர்களுக்கு அரசாங்கம் ஆதரவளிப்பதாக மக்கள் நினைக்கிறார்கள், ஆனால் மலாய்க்காரர்களையும் முஸ்லிம்களையும் நீங்கள் கேட்டுப் பாருங்கள், இந்த அரசாங்கம் அவர்கள் மீது கவனம் செலுத்தவில்லை என்று கூறுவார்கள். எல்லா நேரங்களிலும் எல்லோரையும் திருப்திப்படுத்த இயலாது என்பதை மக்கள் உணர வேண்டும்,” என்று அவர் கூறினார்.