மலாக்கா: இந்த நாட்டில் பள்ளிக்கு தங்கள் குழந்தைகளை அனுப்பும் பெற்றோர்கள் மத்தியில் சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு திருப்தி அளிக்கக்கூடிய நிலையில் இல்லை என விசாரணை மற்றும் போக்குவரத்து அமலாக்கப் பிரிவுத் தலைவர் சுப்ரிதெண்டன் ஹசான் பாஸ்ரி யாயா கூறினார்.
குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் போது பெற்றோர்களும் மாணவர்களும் தலைகவசத்தை அணிந்து செல்வது குறைவாகவே காணப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
கடந்த மூன்று நாட்களில் ஐந்து பள்ளிகளில் நடத்தப்பட்ட ‘ஒப்ஸ் டிடிக்’ புள்ளி விவரங்களின் படி 216 அபராதங்கள் வெளியிடப்பட்டுள்ள வேளையில், அவற்றில் 194 அபராதங்கள் தலை கவசம் அணியாதக் காரணத்தால் வழங்கப்பட்டது என அவர் தெரிவித்தார்.
சாலை பாதுகாப்பு மற்றும் சட்டத்தை மதிக்காது, அதனால் ஏற்படக்கூடும் ஆபத்துக்களைப் பற்றி சிறிதும் கவலைப்படாத சில பெற்றோர்களின் நடவடிக்கை ஏற்க முடியாதது என அவர் கூறினார்.
“குழந்தைகளின் பாதுகாப்பு பெற்றோர்களின் கடமையாகும். ஒருவேளை, இம்மாதிரியான அலட்சியப் போக்கினால் குழந்தைகளுக்கு ஏதேனும் நடந்தால், 2001-ஆம் ஆண்டுக்கான குழந்தைகள் சட்டத்தின் கீழ் பெற்றோர்கள் மீது வழக்குத் தொடரப்படலாம்” என அவர் கூறினார்.