புது டில்லி: இந்தியாவில் டிக் டாக் செயலிக்கான தடையை நீதிமன்றம் நீக்கியதற்குப் பிறகு அந்நிறுவனம் இழந்த வியாபாரத்தை மீண்டும் பெறுவதற்காக பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
டிக் டாக் செயலி சமூக கலாச்சாரத்தை சீரழிப்பதாக மதுரை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், டிக் டாக் செயலிக்கு தடை விதித்து உத்தரவிடப்பட்டது. இதையடுத்து கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து டிக் டாக் நீக்கம் செய்யப்பட்டது. இதனால் டிக் டாக் நிறுவனம் பெரும் சரிவை சந்தித்தது. ஒரு நாளைக்கு 3.48 கோடி ரூபாய் நஷ்டமடைவதாக உச்சநீதிமன்றத்தில் அந்நிறுவனம் மேல்முறையீடு செய்திருந்தது.
இதனை அடுத்து டிக் டாக் செயலியில் இருந்து 60 இலட்சத்துக்கும் மேற்பட்ட காணொளிகள் நீக்கப்பட்டு விட்டதாகவும், 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் டிக் டாக் செயலியை பயன்படுத்த முடியாது என்றும் மதுரை உயர்நீதிமன்றத்தில் டிக் டாக் நிறுவனம் வாக்குறுதி அளித்ததன் பேரில் அதன் மீதான தடை நீக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில், நீதிமன்ற தடை நீக்கத்துக்குப் பின், இழந்த வியாபாரத்தை மீண்டு பெறுவதற்காக அதிரடி சலுகைகளை டிக் டாக் நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, மே 1-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதி வரையியிலும் டிக் டாக் செயலியை பதிவிறக்கம் செய்யும் மூன்று அதிர்ஷ்டசாலிகளுக்கு 1 இலட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று டிக் டாக் நிறுவனம் அறிவித்துள்ளது.