புத்ராஜெயா: நம்பிக்கைக் கூட்டணியின் ஓராண்டு கால நிறைவை ஒட்டி பிரதமர் மகாதீர் முகமட் இன்று வியாழக்கிழமை புத்ராஜெயாவில் உரை நிகழ்த்தினார். நம்பிக்கைக் கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றியதும் முதலில் அரசியல்வாதிகள், அரசாங்க உயர் அதிகாரிகள் மீதான ஊழல் சம்பந்தப்பட்ட விவகாரங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டதை பிரதமர் முன்வைத்தார்.
முன்னாள் பிரதமர் நஜிப்பின் கீழ் செய்யப்பட்ட ஒப்பந்தங்களை பேச்சுவார்த்தைகளின் வழி 22.8 பில்லியன் ரிங்கிட் நிதியை அரசாங்கம் சேமித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
ஒரு சில விவகாரங்களில், குறிப்பாக நம்பிக்கைக் கூட்டணியின் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் கால தாமதம் ஏற்பட்டாலும், அதற்கான வேலைகளை தொடர்ந்து நம்பிக்கைக் கூட்டணி நடைமுறைப்படுத்துவதில் கவனம் செலுத்தும் எனவும் பிரதமர் கூறினார்.
குறிப்பாக, நம்பிக்கைக் கூட்டணி உருவாக்கப்பட்டக் காரணம், தேசிய முன்னணியை வீழ்த்துவதற்கே என்று பிரதமர் கூறினார். நான்கு முக்கியக் கட்சிகள் ஒன்றிணைந்து தேசிய முன்னணியை வீழ்த்துவதற்கு ஒன்று சேர்ந்ததாகக் கூறிய பிரதமர், மக்களின் ஆதரவின்றி எதுவும் நடந்திருக்காது எனக் குறிப்பிட்டார்.
தற்போதைய, சூழலில் அரசியல் இலாபத்திற்காக இன, மத பிரச்சனைகளைப் பயன்படுத்துவதை நிறுத்திக் கொள்ளுமாறு பிரதமர் எதிர்கட்சிகளுக்கு நினைவூட்டினார்.
முக்கியமாக, அதிகாரத்தில் இருந்தவர்கள் அதிகப்படியான சொத்துகளை குவித்ததன் காரணமாகத்தான் மலாய் மற்றும் இஸ்லாமிய மக்கள் அம்னோ கட்சியை நிராகரித்தனர் என பிரதமர் கூறினார்.
மேலும், மலாய்க்காரர் மற்றும் இஸ்லாமிய நோக்கங்களுக்காக நிறுவப்பட்ட திட்டங்களில் அதிகப்படியான ஊழலை செய்து மக்களை ஏமாற்றியதன் காரணத்தால் அவர்கள் வீழ்த்தப்பட்டார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.
தேர்தல் வாக்குறுதிகளை பூர்த்தி செய்வதில் மட்டும் நம்பிக்கைக் கூட்டணி கவனத்தை செலுத்தாமல், நாடு மற்றும் மக்களின் நலனுக்காகவும் ஓர் எதிர்கால திட்டத்தை செயல்படுத்த திட்டம் வைத்திருப்பதாக அவர் கூறினார்.