புவனேஸ்வர் – நேற்று வெளியான இந்தியத் தேர்தல் முடிவுகளின்படி ஒடிசா மாநிலத்திற்கு நடைபெற்ற மாநில சட்டமன்றத் தேர்தல்களில் நவீன் பட்நாயக் தலைமையேற்றிருக்கும் பிஜேடி எனப்படும் பிஜூ ஜனதா தளக் கட்சி மொத்தமுள்ள 147 தொகுதிகளில் 105 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கிறது.
இதனைத் தொடர்ந்து 5-வது முறையாக ஒடிசா மாநிலத்தின் முதல்வராக நவீன் பட்நாயக் பொறுப்பேற்கிறார்.
முன்பு ஒரிசா என்ற பெயர் கொண்டிருந்த ஒடிசா மாநிலத்தில் பாஜக 26 சட்டமன்றத் தொகுதிகளையும் காங்கிரஸ் 14 தொகுதிகளையும் கைப்பற்றியிருக்கிறது.
ஒடிசா மாநிலத்தில் ஒரு காலத்தில் பிரபலமான தலைவராகவும் முதலமைச்சராகவும் திகழ்ந்த பிஜூ பட்நாயக்கின் மகன்தான் நவீன் பட்நாயக் ஆவார். தந்தையின் மறைவுக்குப் பின்னர் பிஜூ ஜனதா தளம் என்ற பெயரிலேயே கட்சி தொடங்கி 1997-இல் ஆட்சியைப் பிடித்த நவீன் பட்நாயக் தொடர்ந்து 5-வது தவணையாக வென்றிருப்பது ஒரு சாதனையாகப் பார்க்கப்படுகிறது.
ஏழை மக்களுக்கான நலத் திட்டங்கள், ஊழல் ஒழிப்பு, ஆணவமில்லாத ஆட்சி முறை ஆகிய அம்சங்களால் 72 வயதான நவீன் பட்நாயக் இன்னும் ஒடிசாவின் செல்வாக்குள்ள தலைவராகத் திகழ்ந்து வருகிறார்.