ஹைட்ராபாட்: ஆந்திர மாநில சட்டமன்றத் தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அபார வெற்றி பெற்றது. 175 உறுப்பினர்கள் கொண்ட சட்டமன்றத்திற்கு 151 இடங்களை வென்றுள்ளது.
ஆளுங்கட்சியாக இருந்த சந்திரபாபு நாயுடு தெலுங்கு தேசம் கட்சி வெறும் 23 உறுப்பினர்களை மட்டுமே பெற்றது. மக்களவை தேர்தலிலும் 25 தொகுதிகளில் 22 இடங்களை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கைப்பற்றியது.
எஞ்சிய மூன்று தொகுதிகளை தெலுங்கு தேசம் வென்றது. வருகிற மே 30-ஆம் தேதி ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திர முதலமைச்சராக பதவியேற்க உள்ளார். இந்நிலையில் டெல்லி சென்று தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் தலைவர் மோடியை ஜெகன் மோகன் ரெட்டி சந்தித்துள்ளார். இவர்களின் சந்திப்புக் குறித்த பதிவினை பிரமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அச்சந்திப்பின் போது, ஆந்திராவிற்கு சிறப்பு சலுகைகள் வழங்க வேண்டும் என்று ஜெகன் வலியுறுத்தி உள்ளார். இந்த சந்திப்பிற்கு பின் பேசியவர், எங்களது மாநில சலுகைகள் கோரிக்கை தொடரும், நிதியளிப்பிலும் கூடுதல் முன்னுரிமை அளிக்க கோரியுள்ளோம் என்று கூறியுள்ளார். பிரதமர் மோடியும் இது ஒரு சிறப்பான சந்திப்பு என்றும், ஆந்திர மாநில வளர்ச்சிக்கு மத்திய அரசு தேவையானதை செய்யும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.