பாஸ்டன்: கடந்த 1972-ஆம் ஆண்டு ‘வோர்ல்டு1’ என்ற கணினி மென்பொருளை ஜே பாரஸ்டர் என்பவர் வடிவமைத்தார். அப்போது கிளப் ஆப் ரோம் என்ற அமைப்பில் பல்வேறு தரப்பினரும் அங்கத்தினர்களாக இருந்தனர்.
இவர்கள் அனைவரும் உலகம் எப்படி வளர்ந்து கொண்டிருக்கிறது, சந்தித்து வரும் பிரச்சனைகள் என்னென்ன உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்தனர். நாம் வாழும் உலகம் எதுவரை நீடிக்கும் என்றும் கணிக்க முயற்சித்தனர்.
இதற்கேற்ப ‘வோர்ல்டு1’ மென்பொருளிற்கு கட்டளைகள் இட்டனர். இதற்காக சுற்றுச்சூழல் மாசுபாடு, மக்கள்தொகை அதிகரிப்பு, இயற்கை வளங்களின் அதிகரிப்பு, மக்களின் வாழ்வாதாரம், பசி, வறுமை உள்ளிட்ட காரணங்கள் கருத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டன.
இதைக் கொண்டு ‘வோர்ல்டு1’ தனது கணிப்பைத் தொடங்கியது. இதன் முடிவுகளின் படி, வரும் 2020-ஆம் ஆண்டு பூமியின் பேரழிவுக்கான தொடக்கம் நிகழும். இதனைத் தடுக்க நாம் ஏதாவது செய்ய வேண்டும் எனக் கணித்துள்ளது.
இல்லையெனில் மனித குலத்தையே கூண்டோடு அழிக்கும் வரை பேரழிவு நிற்காது என்று கணிக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக மாசுபாடு உலகம் முழுவதும் பல்வேறு நிலைகளில் அதிகரிக்கும். 2040-இல் உச்சக்கட்டத்தை எட்டும் எனவும் பிறகு 2050-இல் மனித நாகரிகமே அழிந்து போகும் என அது குறிப்பிட்டுள்ளது.
இந்த விவரங்களைக் கொண்டு டி லிமிட்ஸ் ஆப் கிரோத் (The Limits of Growth) என்ற புத்தகத்தை கிளப் ஆப் ரோம் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்ட முக்கியமான விசயம், வரும் 2072-ஆம் ஆண்டு மனித நாகரிகம் முற்றிலும் அழிந்துவிடும்.
நடக்கும் சூழலைப் பார்த்தால் பூமியின் பேரழிவு ஏற்கனவே தொடங்கிவிட்டது என்று பல்வேறு அறிஞர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர்.