புது டில்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை நேற்று வெள்ளிக்கிழமை முதன் முறையாக சந்தித்து பல்வேறு விவகாரங்களை முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து நாட்டில் உள்ள விவசாயிகள், வணிகர்களுக்கு சிறப்பு அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
பிஎம்– கிசான் திட்டம் மூலம் ஏழை விவசாயிகளுக்கு மூன்று தவணைகளில் 6,000 ரூபாயைக் கொடுக்க அமைச்சரவை முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த புதிய திட்டத்தின் மூலம் நாட்டில் உள்ள 15 கோடி விவசாயிகள் பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல வணிகர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்துக்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் 3 கோடி வணிகர்கள் பயனடைவர் என்று கூறப்படுகிறது.
கிராமப்புறப் பொருளாதாரத்தில் நிலவிவரும் பிரச்னைகளை சரி செய்யும் நோக்கில் இந்தத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. 2018 – 19 நிதி ஆண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியான ஜிடிபியில் விவசாயத் துறையின் பங்கு மிகக் குறைவாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
மத்திய வரவு செலவு இன்னும் ஒரு மாத காலத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், விவசாயத் துறையில் கவனம் செலுத்தும் நோக்கில் அரசு பிஎம் கிசான் திட்டத்தை கையில் எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.