புது டில்லி: வாயு புயல் நேற்று புதன்கிழமை குஜராத் கரைக்கு மிக அருகில் நகர்ந்து வந்த வேளையில், தற்போது, அது திசை மாறி மீண்டும் கடலுக்குள் திரும்பியுள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஆதலால், முன்னர் கூறியதுபோல், வாயு புயல் போர்பந்தர் அருகே கரையைக் கடக்காது என்று தெரிய வந்துள்ளது.
இதன் அடிப்படையில் குஜராத் கரையில் வாயு புயல் அதிக பாதிப்பு ஏற்படுத்தாது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆயினும், குஜராத் கடலோர பகுதிகளில் பலத்த காற்று மற்றும் கனமழைக்கு வாய்ப்புள்ளது என அம்மையம் எச்சரித்துள்ளது.
குஜராத்தில் இன்று வியாழக்கிழமை காலை முதல் பலத்த காற்று வீசி வருவதாகக் கூறப்படுகிறது. கரையில் இருந்து 10 கிலோ மீட்டருக்கு மக்கள் நடமாடாமல் பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட்டு உள்ளனர்.
கடந்த 1998-ஆம் ஆண்டு துறைமுக நகரமான கண்ட்லாவை பாதித்த புயல் அப்போது 1,000 பேரின் உயிரைப் பறித்தது. தற்போது 21 ஆண்டுகள் கழித்து வாயு புயல் அதற்கு இணையான தாக்கத்தை ஏற்படுத்தலாம் எனக் கூறப்படுகிறது.
10,000-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக துவாரகாவில் இருந்து பேருந்துகள் மூலமாக வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டு உள்ளனர். கடற்கரையை ஒட்டிய 500 கிராமங்களில் வசிக்கும் மக்களும் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் மாற்றப்பட்டுள்ளனர்.