சிரம்பான்: நெகிரி செம்பிலான் வாழ் மக்கள் ஆகஸ்ட் மாதம் முதல் மைபஸ் சிரம்பான் (MyBus Seremban) சேவையை தங்களின் கைப்பேசியிலிருந்து பெறலாம் என போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் கூறினார்.
சிட்டிலிங் செண்டெரியான் பெர்ஹாட் நிறுவனத்தின் கீழ் இயங்கும் மைபஸ் சிரம்பான், கைப்பேசி பயன்பாடு ஒன்றை ஆகஸ்டு மாதத்தில் தொடங்குவதற்கு திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார். இந்த பயன்பாடு மூலமாக மக்கள் பேருந்து இருக்கும் இடம் மற்றும் பேருந்து வந்து சேரும் நேரத்தை தெரிந்துக் கொள்ளலாம் என்று கூறினார். மேலும், பணமில்லாத சேவையை ஊக்குவிக்கும் வகையிலும் இந்த சேவை அமைகிறது என்று அவர் கூறினார் .
“அடுத்த வருடத்தில் நெகிரி செம்பிலானில் உள்ள அனைத்து மைபஸ் சிரம்பான் சேவைகளும் பணமில்லாத சேவையை முழுமையாக அமல்படுத்தும். இந்த செயல்முறையானது மக்களுக்கு பயனளிக்கக்கூடிய வகையில் இருக்கும்” என்று அவர் கூறினார்.
நெகிரி செம்பிலானைத் தவிர்த்து மைபஸ் சேவை பெர்லிஸ், திரெங்கானு மற்றும் பேராக் மாநிலத்தில் சிறிய அளவில் தொடங்கப்பட்டுள்ளதை லோக் சுட்டிக் காட்டினார்.
மைபஸ் சிரம்பான் சேவை கடந்த 2015-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கப்பட்டு இதன் கீழ் 98 பேருந்துகள் இயங்கி வருகின்றன.