சென்னை – இன்று ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 23) நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் பின்னர் வழக்கு விவகாரங்களால் நீதிமன்றத்தால் ஒத்தி வைக்கப்பட்டது.
ஆனால், நேற்று சனிக்கிழமை நடிகர் சங்கத் தேர்தல் குறித்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் திட்டமிட்டபடி இன்று தேர்தலை நடத்த உத்தரவிட்டது.
அதனைத் தொடர்ந்து சென்னை மயிலாப்பூர் செயிண்ட் எப்பாஸ் பள்ளி வளாகத்தில் இந்தத் தேர்தல் இன்று காலை தொடங்கி சுறுசுறுப்பாக நடத்தப்பட்டு வருகிறது.
நடிகர்-நடிகையர் காலையிலிருந்து சாரை சாரையாக வந்து வாக்களித்து செல்கின்றனர்.
எனினும், வெளியூர்களில் உள்ள நடிகர்கள் வாக்களிக்க முடியவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அஞ்சல் வழி வாக்குகள் உரிய நேரத்தில் பலருக்குக் கிடைக்கவில்லை என்ற குறைகூறல்கள் எழுந்துள்ளன.
நடிகர் ரஜினிகாந்தே தனக்கு உரிய நேரத்தில் வாக்கு வந்து கிடைக்கவில்லை என்றும் மும்பையில் தர்பார் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருப்பதால் வாக்களிக்க இயலவில்லை என்றும் கூறியிருக்கிறார்.
இன்று நடைபெறும் தேர்தலில் பாக்கியராஜ் தலைமையிலான குழுவினர் சங்கரதாஸ் சுவாமிகள் அணி என்ற பெயரிலும், நாசர்-விஷால் தலைமையிலான அணி பாண்டவர் அணி என்ற பெயரிலும் போட்டியிடுகின்றனர்.