Home வணிகம்/தொழில் நுட்பம் அஸ்ட்ரோவின் வரிக்கு பிந்திய இலாபம் 176 மில்லியனாக உயர்ந்தது

அஸ்ட்ரோவின் வரிக்கு பிந்திய இலாபம் 176 மில்லியனாக உயர்ந்தது

880
0
SHARE
Ad

கோலாலம்பூர் – எதிர்வரும் ஜனவரி 2020-இல் முடிவடையும் நிதியாண்டில், தனது முதல் காலாண்டு நிதியறிக்கை அஸ்ட்ரோ நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. அந்த அறிக்கையின்படி வரிக்கு முந்திய இலாபமாக 444 மில்லியன் ரிங்கிட்டையும், வரிக்குப் பிந்திய இலாபமாக 176 மில்லியன் ரிங்கிட்டையும் அந்த நிறுவனம் அடைந்திருக்கிறது.

எனினும்  வரிக்கு முந்திய இலாபத்தில் 4 விழுக்காடு சரிவு ஏற்பட்டிருக்கிறது. செலவினங்களில் கட்டுப் பாட்டைக் கடைப்பிடித்த காரணத்தால் வரிக்குப் பிந்திய இலாபமான 176 மில்லியன், ஒரு விழுக்காட்டு உயர்வைக் கண்டிருக்கிறது.

இதனைத் தொடர்ந்து பங்குக்கு 2.0 காசு என்ற அளவில் இலாப ஈவு வழங்கப்படுவதாக அஸ்ட்ரோ அறிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

ஒவ்வொரு தனிநபரும் செலுத்தும் கட்டணத் தொலைக்காட்சி (ARPU) 80 சென் உயர்ந்து சராசரியாக 100 ரிங்கிட் 40 காசாக பதிவாகியிருக்கிறது.  -ஆகப் பதிவு

அஸ்ட்ரோ நிறுவனம் இணையம் மூலம் பெறும் வருவாய் தற்போது 84 மில்லியனை ஈட்டியுள்ளது.

நிதியறிக்கை வெளியீடு தொடர்பாக, அஸ்ட்ரோ நிறுவனத்தின் தலைவர் துன் சாக்கி அஸ்மி கூறுகையில், “போட்டித் தன்மைமிக்க ஊடகத் துறையில், அஸ்ட்ரோ தொடர்ந்து வருமானத்தை உருவாக்கி வருகிறது. செலவுகளில் கட்டுக்கோப்பாக இருக்கிறது; மூலதன நிர்வாகத்தில் ஆக்ககரமாகச் செயல்படுகிறது. முதல் இடைக்கால இலாப ஈவு பங்குக்கு 2.0 சென் என்பதை இயக்குநர் வாரியம் பெருமனதுடன் அறிவிக்கின்றது” எனத் தெரிவித்தார்.

அஸ்ட்ரோவின் தலைமை நிர்வாக அதிகாரி, ஹென்ரி டான் (படம்) கூறுகையில், “சவால்மிக்க இன்றைய பங்குச் சந்தையில், குறைந்த உள்ளடக்கம் மற்றும் செயல்பாட்டு செலவீனங்களை மேம்படுத்தும் முயற்சியில் அஸ்ட்ரோவின் வரிக்கு பிந்திய இலாபம் வளர்ச்சி கண்டுள்ளது. மலேசியாவிலுள்ள 5.7 மில்லியன் வீடுகளிலும் 23 மில்லியன் நபர்களுக்கும் எங்களின் கட்டணத் தொலைக்காட்சி மற்றும் என்ஜோய் தளங்களின் வாயிலாக தாய்மொழி மற்றும் பிரிமியம் உள்ளடக்கங்களைத் தொடர்ந்து வழங்குவதில் கவனம் செலுத்தி வருவோம்” என்று குறிப்பிட்டார்.

இணையம் வழி சேவைகள் உயர்வு

அஸ்ட்ரோ செட்-அப் பாக்ஸ் எனப்படும் இணைப்புப் பெட்டிகளின் எண்ணிக்கை 18 விழுக்காடு உயர்ந்து 1 மில்லியனாக உயர்ந்த வேளையில், இணையம் வழி நிகழ்ச்சிகளைப் பதிவிறக்கம் செய்து பார்க்கும் பயன்பாடு அதிகரித்திருக்கிறது.

“ஆன் டிமாண்ட்” எனப்படும் இணையம் வாயிலாக நிகழ்ச்சிகளைப் பதிவிறக்கம் எண்ணிக்கை 51% உயர்ந்து 16 மில்லியன் என பதிவாகியுள்ளது.

அஸ்ட்ரோ கோ செயலி பயனர்கள் எண்ணிக்கை 29% உயர்ந்து 2.2 மில்லியன் பேர்களை தற்போது அது கொண்டுள்ளது.

வானொலி சேவையிலும் முன்னணி

அஸ்ட்ரோ வானொலி தொடர்ந்து முதல் நிலை வானொலி நிலையம் எனும் இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. வாராந்திர 16.7 மில்லியன் இரசிகர்களை அஸ்ட்ரோ வானொலி கொண்டிருக்கும் வேளையில் ஒவ்வொரு மாதமும் சுமார் 13.2 மில்லியன் பேர் மின்னியல் (டிஜிட்டல்) அகப்பக்கங்களை வலம் வருகின்றார்கள். அவ்வகையில், எரா, மற்றும் மை வானொலி நிலையங்கள் முறையே 6.5 மில்லியன் மற்றும் 2.3 மில்லியன் இரசிகர்களைக் கொண்டுள்ளன.

அஸ்ட்ரோவின் மின்னியல் தளங்களான அஸ்ட்ரோ அவானி (Astro Awani), கெம்பாங் (Gempak), ஜூவான் (Xuan), அஸ்ட்ரோ உலகம் (Ulagam) மற்றும் ஸ்டேடியம் அஸ்ட்ரோ (Stadium Astro) ஆகியவை சுமார் 10 மில்லியனுக்கும் அதிகமான மாதாந்திரப் பார்வையாளர்களை ஈர்த்துள்ளன.

அனைவரையும் கவர்ந்த கேம் ஆப் த்ரோன்ஸ்

உலகம் முழுக்க தொலைக்காட்சி இரசிகர்கள் கண்டு களித்த கேம் ஆப் த்ரோன்ஸ் ஆங்கிலத் தொடர் மலேசியர்களையும் பெருமளவில் ஈர்த்திருக்கிறது. இத்தொடரின் இறுதி அத்தியாயங்களை 2.1 மில்லியன் வாடிக்கையாளர்கள் தொலைக்காட்சி வழி பார்த்து இரசித்தார்கள்.

உலகளாவிய உள்ளடக்கம் மற்றும் ஊடகத் துறையில் தொடர்ச்சியான மாற்றங்கள் மற்றும் திருட்டு அச்சுறுத்தல் ஆகியவையுடன் பங்குச் சந்தையில் போட்டிகள் அதிகரித்து வருகின்றன. வாடிக்கையாளர்களின் தேவைகளை அறிந்து, உள்ளடக்கங்களைப் புதுப்பித்து கட்டணத் தொலைக்காட்சி மற்றும் என்ஜோய் சேவைகளை வலுப்படுத்துவதில் அஸ்ட்ரோ தொடர்ந்து கவனம் செலுத்துகிறது.