Home இந்தியா இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமனம் – தொடரும் வாரிசு அரசியல்

இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமனம் – தொடரும் வாரிசு அரசியல்

1174
0
SHARE
Ad

சென்னை – கடந்த சில வாரங்களாக எதிர்பார்க்கப்பட்டபடி திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் இன்று வியாழக்கிழமை நியமிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து திமுகவில் தொடரும் குடும்ப-வாரிசு அரசியல் மீண்டும் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

66 வயதைக் கடந்து விட்ட மு.க.ஸ்டாலின் குடும்பத்திலிருந்துதான் அடுத்த தலைமை வரவேண்டும் என்ற குடும்ப அழுத்தம் காரணமாக உதயநிதி நியமிக்கப்பட்டிருக்கிறார் எனக் கருதப்படுகிறது.

நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கருணாநிதியின் மகள் கனிமொழியின் ஆதிக்கமும், செல்வாக்கும் திமுகவில் பரவி ஆழமாக வேரூன்றுவதற்கு முன்னரே உதயநிதியைக் களத்தில் இறக்கி கட்சியில் தனது ஆதரவுக் களத்தை நிலைநிறுத்திக் கொள்ளும் ஸ்டாலினின் ஒரு முயற்சியாகவும் உதயநிதி நியமனம் பார்க்கப்படுகின்றது.

#TamilSchoolmychoice

இன்று பிற்பகலில் உதயநிதி இளைஞரணிச் செயலாளராக நியமிக்கப்பட்டதிலிருந்து, திமுக கட்சியினரும், திமுக தோழமைக் கட்சித் தலைவர்களும் ஏதோ அவரால்தான் திமுக கடந்த பொதுத் தேர்தலிலும், சட்டமன்ற இடைத் தேர்தல்களிலும் இவ்வளவு பெரிய வெற்றியை அடைய முடிந்தது என்பது போலவும், அதனால் அவரை நியமித்தது கட்சிக்கும், கட்சியின் எதிர்காலத்திற்கும் சிறந்த முடிவு எனவும் கூறி வருகின்றனர்.

திமுகவுக்குப் பின்னடைவா?

ஆனால், அதே வேளையில் பொதுப் பார்வை கொண்ட ஊடகவியலாளர்களும், நடுநிலைக் கண்ணோட்டத்தைக் கொண்ட அரசியல் பார்வையாளர்களும், திமுகவுக்கு இது ஒரு பின்னடைவு எனப் பார்க்கின்றனர்.

தமிழகத்தில் அடுத்த ஆட்சியைப் பிடிக்க வாய்ப்புள்ள நிலையில், இத்தகைய நியமனத்தைச் செய்து ஸ்டாலினுக்குப் பிறகு உதயநிதிதான் என மறைமுகமாக அறிவித்திருப்பது, தமிழகத்தின் இளைய வாக்காளர்களிடையே திமுகவுக்கு ஆதரவைத் திரட்டித் தராது எனக் கருதப்படுகின்றது.

யார் வேண்டுமானாலும், அமைச்சராகலாம், தலைமைப் பதவிக்கு வரலாம் என்ற தோற்றத்தைக் கொண்டுள்ள அதிமுகவுக்கு இதனால் சற்றே கூடுதல் ஆதரவு கிடைக்க வாய்ப்புள்ளது என்றும் சில பார்வையாளர்கள் கணிக்கின்றனர்.

அடுத்த தமிழகத்தின் முதல்வராக ஸ்டாலின் பார்க்கப்படும் ஒரு முக்கியமான காலகட்டத்தில் வாரிசு – குடும்ப அரசியலை அவர் தூக்கிப் பிடித்திருப்பது அவருக்கான தோற்றத்தில் சற்றே சிதைவை ஏற்படுத்தும்.

இந்தப் பாதிப்பு திமுகவுக்குக் கிடைக்கக் கூடிய வாக்குகளிலும் பாதிப்பை ஏற்படுத்துமா என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

உதயநிதியும் மக்களிடையே அறிமுகமான முகமே தவிர, அவரது எந்த சினிமாப் படமும் பிரமாதமான – சொல்லிக் கொள்ளும்படியான வெற்றியைப் பெற்றதில்லை. அவர் எப்போதுமே சிறந்த நடிகராகவும் பார்க்கப்பட்டதில்லை. அழகான முன்னணி நடிகையை இணையாகப் போட்டு இரசிகர்களை ஈர்க்கும் படமாகத்தான் அவரது படங்கள் இருந்தனவே தவிர, ஸ்டாலினுக்காக எந்தப் படமும் ஓடியதில்லை.

அழகான தமிழ் நடையோ, மொழி ஆளுமையோ அவருக்கில்லை. இதன் காரணமாக, திமுகவின் அடுத்த தலைவராகத் தன்னைக் காட்டிக் கொள்வதிலும், நிலைநிறுத்திக் கொள்வதிலும் அவர் கடும் சிரமத்தை எதிர்நோக்குவார்.

93 வயதுவரை வாழ்ந்த கலைஞரின் நீண்ட கால தலைமை, அவரது தலைமையின் கீழ் அரசுப் பொறுப்புகளில் ஸ்டாலின் அமர்ந்து தனது திறமையைக் காட்ட முடிந்தது – போன்ற வாய்ப்புகள் உதயநிதிக்கும் வாய்க்குமா என்பதும் சந்தேகமே!

அந்த வகையில் அவரைவிட கனிமொழி சிறந்த ஆளுமை கொண்டவராகவும், தமிழ்மொழியில் திறன் பெற்றவராகவும், நல்ல மேடைப் பேச்சாளராகவும் பார்க்கப்படுகிறார்.

இதுவரையில் நாடாளுமன்றத்திலும் தனது திறமைகளை ஓரளவுக்கு அவர் வெளிக்காட்டியிருக்கிறார். எனினும் வருங்காலத்தில் ஒரு பெண்மணியான அவரது பின்னால் திமுகவினர் அணி சேர்வார்களா – கட்சியைத் தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வரும் திறமைகளை அவர் கொண்டிருக்கிறாரா என்பதும் போகப் போகத்தான் தெரியும்.

மருமகனும் ஓங்கி வளர்கிறார்…

இன்னொரு வகையில் பார்த்தால் ஸ்டாலினின் மருமகன் சபரீசனும் கட்சியில் மிகுந்த செல்வாக்கு கொண்டவராக, கட்சி மற்றும் ஸ்டாலின் எடுக்கும் முக்கிய முடிவுகளின் பின்னணியில் செயல்படுபவராகப் பார்க்கப்படுகின்றார்.

மருமகன் சபரீசனுடன் ஸ்டாலின்…

திமுகவின் வியூகம், செயல்பாடுகள், தகவல் தொடர்பு நடவடிக்கைகள் போன்ற அம்சங்களில் ஸ்டாலினுக்குப் பக்கபலமாகவும், பல முக்கிய அரசியல் கூட்டங்களில் ஸ்டாலினோடு பகிரங்கமாக உடன் செல்லும் அரசியல் உதவியாளராகவும் சபரீசன் செயல்பட்டு வருகிறார்.

ஸ்டாலின் – அவரது மகன் உதயநிதி – மருமகன் சபரீசன் – கருணாநிதி மகள் கனிமொழி – இந்த நால்வரைத் தவிர்த்து கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் திமுகவில் திறன்மிக்க தலைவர்களாக யாரும் இதுவரை அடையாளம் காட்டப்படவில்லை. அனைவரும் துதிபாடிகளாகவே இருக்கிறார்கள்.

எனவே, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த – மேற்குறிப்பிட்ட நால்வரைச் சுற்றியே இனி திமுகவின் அதிகார மையங்களும், ஆதரவுத் தளங்களும் செயல்படும்.

ஸ்டாலினுக்குப் பிறகு இந்த நான்கு மையங்களும் ஒன்றித்து கட்சியை வளர்க்குமா – அடுத்த கட்டத்திற்குத் திமுகவைக் கொண்டு செல்லுமா – தமிழக வாக்காளர்களிடையே தொடர்ந்து செல்வாக்கைத் தக்க வைத்துக் கொள்ளுமா – அல்லது ஸ்டாலின்-அழகிரி மோதல் போல் பிற்காலத்தில் வெடிக்குமா – என்பதையெல்லாம்,

ரஜினிகாந்த் பாணியில் சொல்வதென்றால் காலம் தான் விடை கூறும்!

-இரா.முத்தரசன்