Home நாடு மனிதவள மேம்பாட்டு நிதி ஆதரவில் தேசிய வேலையிட பாதுகாப்பு, சுகாதார கழகத்தின் பி-40 திறன் மேம்பாட்டு...

மனிதவள மேம்பாட்டு நிதி ஆதரவில் தேசிய வேலையிட பாதுகாப்பு, சுகாதார கழகத்தின் பி-40 திறன் மேம்பாட்டு திட்டம்

1282
0
SHARE
Ad

 

மனிதவள அமைச்சர் குலசேகரனுடன் மியோஷ் குணசேகரன்

கோலாலம்பூர் – பாக்காத்தான் ஹாரப்பான் அரசாங்கத்தின் கீழ் B40 தரப்பினருக்காக மக்கள் நலன் பேணும் பல்வேறு திட்டங்கள் தொடர்ந்து அறிமுகப்படுத்தப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

B40 தரப்பினரின் வாழ்க்கை தரத்தை எல்லா நிலைகளிலும் உயர்த்துவதை பக்காத்தான் ஹாரப்பான் அரசாங்கம் கடப்பாடாக கொண்டுள்ளது. அந்த வகையில், மனிதவள அமைச்சின் கீழ் இயங்கும் மனிதவள மேம்பாட்டு நிதி (HRDF) இன்று அறிமுகப் படுத்தியிருக்கும் B40 திறன் மேம்பாட்டு திட்டம் இளைஞர்களின் திறன் மேம்பாட்டிற்கும் வாழ்வாதார மேன்மைக்கும் வழி வகுக்கும் என்கிறார் தேசிய வேலையிட பாதுகாப்பு, சுகாதார கழகத்தின் துணைத்தலைவர் திரு. குணசேகரன் கந்தசுவாமி.

#TamilSchoolmychoice

அவர் மேலும் கூறுகையில், இத்திறன் மேம்பாட்டு திட்டம் B40 தரப்பினருக்கு உதவும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டார். மனிதவள மேம்பாட்டு நிதியின் ஒத்துழைப்புடன் நடத்தப்படும் இத்திட்டம் அரசாங்கத்தின் சிறப்பு நிதி ஒதுக்கீட்டின் வழி வேலையிட பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறையில் திறன் பயிற்சியினைப் பெறுவதற்கு வழி அமைத்துக் கொடுக்கிறது என்றும் திரு. குணசேகரன் கந்தசுவாமி விளக்கினார்.

இத்திட்டத்தின் வழி, முதல் பிரிவில் பொறியியல், சுகாதார அறிவியல், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான துறைகளில் டிப்ளோமா, இளங்கலை மற்றும் முதுகலை கல்வியைப் பெற்றுள்ள வேலையில்லாத பட்டதாரிகள், 33 நாள்களுக்கு முழுநேரக் கல்வியைப் இத்திட்டத்தின் மூலம் பெறுவதன் வழி பாதுகாப்பு மற்றும் சுகாதார அதிகாரி (SHO)-க்கான சான்றிதழைப் பெற்று இவர்கள் வேலை வாய்ப்பினை பெறுவதற்கான வாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன.

அவர்களைத் தொடர்ந்து, இரண்டாம் பிரிவில் SKM/SPM/PMR/PT3 தேர்வுகளை முடித்து வேலையில்லாமல் இருப்பவர்கள் முழு நேரமாக 21 நாள்கள் தள பாதுகாப்பு மேற்பார்வையாளர் (SSS) பயிற்சியினை மேற்கொள்வதன் வழி அதில் சான்றிதழ் பெற்று இவர்களும் வேலை வாய்ப்பினை பெறுவதற்கான வாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன.
மேலும், மூன்றாம் பிரிவில் வேலையிட பாதுகாப்பு மற்றும் சுகாதாரம், பொறியியல், சுகாதார அறிவியல், அறிவியல், தொழில்நுட்பம் தொடர்பான துறைகளைச் சேர்ந்த தற்போதைய தொழிலாளர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சிகளும் இந்த B40 திறன் மேம்பாட்டு திட்டத்தின் வழி வழங்கப்படுகின்றன.

பகுதி நேரமாகவும் பயிற்றிகள் அடிப்படையிலும் 22 நாள்களுக்கு நடத்தப்படும் பயிற்சியின் வழி பாதுகாப்பு மற்றும் சுகாதார அதிகாரிக்கான சான்றிதழைப் பெறலாம். இறுதியாக, நான்காம் பிரிவில் தள பாதுகாப்பு தொடர்பான துறைகளைச் சேர்ந்த தற்போதைய தொழிலாளர்களுக்காக பகுதி நேரமாகவும் பயிற்சிகள் அடிப்படையிலும் 10 நாள்களுக்கு நடத்தப்படும் பயிற்சியின் வழி தள பாதுகாப்பு மேற்பார்வையாளர் சான்றிதழைப் பெறலாம். இதன்வழி தற்போது பணியிலிருந்து தொழிலாளர்களின் திறன் மேம்படுத்தப்பட்டு அவர்களின் வருமானம் உயர்வதற்கான வழி ஏற்படுகிறது.

முற்றிலும் இலவசமாக நடத்தப்படும் இப்பயிற்சித் திட்டங்களில் 16 வயதிலிருந்து 35 வயது வரைக்குமான இளைஞர்கள் பங்கு பெறலாம். இப்பயிற்சிகள் அனைத்தும் சிலாங்கூர் பண்டார் பாரு பாங்கியில் அமைந்துள்ள NIOSH-இன் தலைமையகத்தில் நடைபெறும். முதல் இரு பிரிவுகளில் பயிற்சி பெறும் பங்கேற்பாளர்களுக்கு தங்கும் வசதி ஏற்படுத்தித் தரப்படும்.

தொடக்கக் கட்டமாக ஒவ்வொரு பிரிவுக்கும் 25 பேர் வீதம் 4 பிரிவுகளுக்கு 100 பேர் இத்திட்டத்தின் வழி திறன் மேம்பாடு அடைவதற்கான வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்கிறார்  குணசேகரன்.

இத்திறன்பயிற்சித் திட்டங்களில் B40 தரப்பினருக்கே முன்னுரிமை வழங்கப்படும் என்பதால் இந்திய இளைஞர்கள் விரைந்து தங்கள் பெயர்களைப் பதிந்து கொள்ளுமாறு  குணசேகரன் கேட்டுக் கொண்டார். மேலும், செய்யப்படும் அனைத்து விண்ணப்பங்களும் துல்லியமாக பரிசீலிக்கப்பட்டு தகுதிபெறும் இளைஞர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர் என அவர் குறிப்பிட்டார்.

முக்கியமாக இத்திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு அதன் முதன்மை அடைவுநிலை குறியீட்டை அடைவதை மனித வள அமைச்சு தொடர்ந்து உறுதிப்படுத்தும் என்பதால் இந்திய இளைஞர்கள் இவ்வாய்ப்பை ஆக்கரமான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என குணசேகரன் வலியுறுத்தினார்.

இத்திறன் பயிற்சி திட்டங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் இளைஞர்கள், NIOSH-இன் அதிகாரி ரஞ்சிதா பாலா அவர்களை 016-5597399 என்ற எண்களிலும் இத்திட்டங்களில் பங்கேற்பாளர் சேர்க்கைக்கு உதவும் i-25 அரசுசாரா இயக்கங்களின் கூட்டமைப்பில் அதிகாரிகள் திலகா -017-3079302 மற்றும் பவித்ரா – 018 958 4456 என்ற எண்களுக்கும் தொடர்பு கொண்டு மேல்விபரங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.