Home வணிகம்/தொழில் நுட்பம் நாட்டின் மிகப் பெரிய ஊடக நிறுவனத்தைக் கையகப்படுத்தியிருக்கும் மொக்தார் அல் புக்காரி

நாட்டின் மிகப் பெரிய ஊடக நிறுவனத்தைக் கையகப்படுத்தியிருக்கும் மொக்தார் அல் புக்காரி

879
0
SHARE
Ad

கோலாலம்பூர் – நாட்டில் இயங்கும் ஊடக நிறுவனங்களில் மிகப் பெரியது மீடியா பிரிமா என்ற நிறுவனம். அந்நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குகளை வாங்கிக் கையகப்படுத்தியிருக்கும் கோடீஸ்வரர் டான்ஸ்ரீ சைட் மொக்தார் அல்புக்காரி அதன் மூலம் நாட்டில் இயங்கும் பல முக்கிய ஊடக நிறுவனங்களை ஒரே குடையின் கீழ் கொண்டு வந்து நிர்வகிக்கின்ற பலம் பொருந்திய நபராக உருவெடுத்திருக்கிறார்.

ஏற்கனவே பல நிறுவனங்களை நடத்திவரும் அவர் மிகப் பெரிய அரசாங்கத் திட்டங்களுக்கான குத்தகைகளையும் பெற்றிருக்கிறார்.

மீடியா பிரிமா நிறுவனம் நியூ ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ், பெரித்தா ஹரியான், ஹரியான் மெட்ரோ, ஆகிய அச்சுப் பத்திரிக்கைகளையும் டிவி3, என்டிவி 7, 8டிவி, டிவி9 ஆகிய தொலைக்காட்சி அலைவரிசைகளையும், மேலும் 4 வானொலி நிலையங்களையும் கொண்டிருக்கும் நிறுவனமாகும்.

#TamilSchoolmychoice

மீடியா பிரிமா நிறுவனத்தின் 11.09 விழுக்காடு பங்குகளை கபோங்கான் கெஸ்தூரி சென்டிரியான் பெர்ஹாட் என்ற நிறுவனத்திடமிருந்து ஜூலை 2-ஆம் தேதி 74 மில்லியன் ரிங்கிட் தொகைக்கு சைட் மொக்தான் வாங்கியிருக்கிறார். கபோங்கான் கெஸ்தூரி நிறுவனம் அமானா ராயா பெர்ஹாட் நிறுவனத்திற்கு சொந்தமான நிறுவனமாகும். அமானா ராயா அரசாங்கம் முழுமையான உடமையைக் கொண்டுள்ள அமைப்பாகும். அதாவது அரசாங்கம் மறைமுகமாக மீடியா பிரிமா நிறுவனத்தில் கொண்டிருந்த பங்குகளை சைட் மொக்தார் வாங்கியிருக்கிறார்.

மீடியா பிரிமாவைத் தவிர்த்து டிஎம்ஆர் மீடியா சென்டிரியான் பெர்ஹாட் நிறுவனத்தின் உரிமையாளராகவும் சைட் மொக்தார் திகழ்கிறார். மலேசியன் ரிசர்வ் என்ற வணிகப் பத்திரிக்கை மற்றும் உத்துசான் மலேசியா நாளிதழ் ஆகியவற்றை டிஎம்ஆர் மீடியா பதிப்பிக்கிறது.

சைட் மொக்தார் தனது ஊடக வணிகங்கள் அனைத்தையும் ஒருங்கிணைத்து ஒரே குடையின் கீழ் கொண்டு வந்து சீர்திருத்தங்கள் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சைட் மொக்தார் வாங்கியிருக்கும் மீடியா பிரிமா நிறுவனத்தில் 7.96 விழுக்காடு பங்குகளை அம்னோ கொண்டிருக்கிறது. எனினும் தங்களின் நிதிப் பிரச்சனைகள் காரணமாக இந்தப் பங்குகளை விற்கப் போவதாக அக்கட்சியின் துணைத் தலைவர் முகமட் ஹசான் ஏற்கனவே அறிவித்திருக்கிறார்.