வாஷிங்டன்: அண்மையில், போயிங் நிறுவனத்தின் மெக்ஸ் 737 ரக விமானத்தை சம்பந்தப்படுத்திய இந்தோனீசிய மற்றும் எத்தியோப்பியா ஆகிய இரு விமான விபத்துகளில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 100 மில்லியன் டாலர் இழப்பீடு வழங்க அந்நிறுவனம் முன்வந்துள்ளது.
அந்நிறுவனம் தயாரித்த 737 மேக்ஸ் ரக விமானங்கள் அடுத்தடுத்து விபத்துக்குள்ளாகின. இவ்விரு விபத்துகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 346 ஆகும்.
இப்போது அறிவிக்கப்பட்டுள்ள இழப்பீடு உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களின் படிப்பு மற்றும் மற்ற செலவுகளுக்கு அளிக்கப்படும் என்று போயிங் தெரிவித்துள்ளது. ஆயினும், இதனை ஏற்க பாதிக்கப்பட்டவர்கள் மறுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த இரு விமான விபத்துகளை தொடர்ந்து 737 மேக்ஸ் ரக விமானங்கள் இயக்குவது உலகம் முழுவதும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அண்மையில், போயிங் 737 மேக்ஸ் விமான சோதனையின் போது புதிய குறைபாட்டை அமெரிக்க கட்டுப்பாட்டாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது தொடர்பில் மேக்ஸ் 737 விமானத்தின் இயக்கம் மேலும் தாமதமாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
சோதனையின் போது சாத்தியமான ஆபத்தை பெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (எப்ஏஏ) அடையாளம் கண்டுள்ளதாகக் கூறியது. ஆயினும், அது குறித்த விவரங்களை அந்நிறுவனம் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.