கோலாலம்பூர்: கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாமன்னர் சுல்தான் அப்துல்லாவின் முடிசூட்டு விழாவில் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் அமர்விடம் மாற்றப்பட்ட விவகாரம் தமக்கு தெரியாது என்று பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கூறினார்.
மாறாக, இது அரண்மனை விவகாரம் என்று பிரதமர் கூறினார்.
முன்னாள் பிரதமரின் அமர்விடம் பகாங் பொதுச் சபையின் இருக்கையாக மாற்றப்பட்டது குறித்து பிரதமரிடம் வினவப்பட்டபோது அவர் இவ்வாறு தெரிவித்தார். இவ்விவகாரத்தினால் கடைசி நிமிடத்தில் நஜிப் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவில்லை என்று கூறப்பட்டது.
இது குறித்து குறிப்பிட்ட பிரதமர் துறை அமைச்சர் டாக்டர் முஜாஹிட் யூசோப், நஜிப்பின் அமர்விடம் முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்டது என்றும், கடைசி நிமிடத்தில் அகற்றப்படவில்லை என்றும் கூறியுள்ளார். இந்த விவகாரம் குறித்து அவருக்கு முன்பதாகவே அறிவிக்கப்பட்டதாகவும் அவர் விளக்கினார்.
இதற்கிடையில், முஜாஹிட்டின் கருத்துக்கு மறுப்பு தெரிவித்த முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், அரண்மனையின் முன்னாள் பிரதமருக்கான இருக்கை நெறிமுறை தெரியாதா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.