கோலாலம்பூர்: நாட்டில் அகதிகளை வேலை செய்ய அனுமதிப்பது குறித்த தனது தேர்தல் வாக்குறுதியை நம்பிக்கைக் கூட்டணி அரசு மறந்து விடக்கூடாது என்று மனிதவளத் துறை அமைச்சர் எம்.குலசேகரன் கூறியுள்ளார்.
“மலேசியாவில் வெளிநாட்டு அகதிகளை வேலை செய்ய அனுமதிப்பது குறித்து அரசாங்கம் இறுதி முடிவை எடுக்கவில்லை. அதுதான் தற்போதைய முடிவு. ஆனால், இது குறித்து அரசாங்கத்தை மறுபரிசீலனை செய்யும்படி சிலர் கேட்டுக் வருகிறார்கள்” என்று ஆவ்ர் குறிப்பிட்டார்.
“அரசாங்கத்தின் முடிவைப் பற்றி நீங்கள் என்னிடம் தனிப்பட்ட முறையில் கேட்டால், ஆம், அவர்கள் பிற நாடுகளில் குடியேறும் வரை குறைந்தபட்சம் அவர்களை இங்கு வேலை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்,” என்று அவர் கூறினார்.
கோலாலம்பூரில் இன்று திங்கட்கிழமை தனிநபர்கள் கடத்தல் தடுப்பு தொடர்பான தேசிய மாநாட்டில், ரோஹிங்கியா அகதிகளின் வேலை வாய்ப்பு உரிமை குறித்து அமைச்சர் குலசேகரனிடம் கேட்கப்பட்டது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நம்பிக்கைக் கூட்டணியின் தேர்தல் அறிக்கையில் 35 வாக்குறுதியில், அகதிகளுக்கு ஐக்கிய நாடுகளின் அகதிகள் முகமை (யுஎன்எச்சிஆர்) அட்டைகள் வழங்கப்படும் என்றும் வேலை செய்ய உரிமை உண்டு என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.