புது டில்லி: அண்மையில் ஏராளமான துணை இராணுவ வீரர்கள் காஷ்மீரில் நிறுத்தப்பட்டதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வந்த நிலையில், ஜம்மூ காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 சட்டப் பிரிவு இரத்து செய்யப்படும் என்று நாடாளுமன்றத்தில் இந்திய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று திங்கட்கிழமை அறிவித்துள்ளார்.
இன்று காலை பிரதமர் நரேந்திர மோடி, தனது அமைச்சரவையுடன் சந்திப்பு நடத்தியதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஜம்மூ காஷ்மீர் மாநிலம் மாற்றியமைக்கப்படும் என்றும், ஜம்மூ காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளாக மாநிலம் பிரிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
கடந்த ஒரு வாரமாக ஜம்மூ காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் பெருமளவு குவிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த வெள்ளிக்கிழமை, மத்திய அரசு, மிகவும் அசாதாரண வகையில் அமர்நாத் யாத்ரிகர்களை உடனடியாக மாநிலத்தில் இருந்து வெளியேறுமாறு கேட்டுக் கொண்டது.
இதனால் மாநிலத்தில் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், மாநிலத்தில் உள்ள முன்னாள் முதல்வர்களான ஒமர் அப்துல்லா, மெஹ்பூபா முப்டி மற்றும் பிரதான அரசியல் கட்சித் தலைவர்கள் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.