Home One Line P1 வேதமூர்த்தி தலைமையில் கெடா இந்தியர்களின் ஒருமைப்பாட்டு நிகழ்ச்சி

வேதமூர்த்தி தலைமையில் கெடா இந்தியர்களின் ஒருமைப்பாட்டு நிகழ்ச்சி

764
0
SHARE
Ad

சுங்கைப்பட்டாணி – பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி தலைமையில் இந்தியர்கள் எழுச்சியுடன் கலந்து கொண்ட ஒருமைப்பாட்டு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆகஸ்ட் 18-ஆம் தேதி சுங்கைப்பட்டாணியில் நடைபெற்றது.

இங்குள்ள ‘மின் தெக்’ மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் திரண்டு தேசிய மாதம் அனுசரிக்கப்படுகின்ற இந்த வேளையில் ஒற்றுமை உணர்வையும் சமூக வலிமையையும் வெளிப்படுத்தினர்.

நிகழ்ச்சியின் தொடக்கத்தில் மித்ராவின் துணைத் தலைமை இயக்குநர் ம.மகாலிங்கம் உரையாற்றினார். மித்ரா தற்பொழுது கண்டுள்ள மேம்பாடு, சமூக-கல்வி-பொருளாதார நலத் திட்டங்கள், ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கான உயர்கல்வி உதவி நிதி குறித்தெல்லாம் விளக்கம் அளித்தார்.

#TamilSchoolmychoice

தொடர்ந்து அமைச்சர் பொன். வேதமூர்த்தி உரை நிகழ்த்தினார். நாடு எதிர்நோக்கியுள்ள நான்காவது தொழிற்புரட்சிக்கு ஆயத்தமாகும்படி இளைஞர்களையும் மாணவர்களையும் கேட்டுக் கொண்ட அமைச்சர், தொழில்நுட்பக் கல்வியில் அக்கறை செலுத்தும்படி உயர்கல்வி மாணவர்களைக் கேட்டுக் கொண்டார்.

“சிறுபான்மை சமுதாயமான இந்தியர்கள் ஒற்றுமையுடன் விளங்கினால்தான் நம் வலிமையை நிலைநிறுத்த முடியும். இந்திய சமுதாயம் பொருளாதார மேம்பாடு காண வேண்டும் என்பதில் அக்கறைக் கொண்டுள்ள நம்பிக்கைக் கூட்டணி ஆட்சியில் தற்பொழுது தெக்குன் கடன் வசதி வழங்கப்படுகிறது. இதை இந்தியர்கள் வகையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று அமைச்சர் வலியுறுத்தினார்.

“வர்த்தக சமுதாயமாக இந்தியர்கள் உருமாற வேண்டும். அதற்கேற்ப, இளம் தொழில்முனைவர்கள் அதிக அளவில் உருவாக வேண்டும். அதற்கு ஏதுவாக, இந்திய இளைஞர்களிடையே நிலவும் வன்முறைக் கலாச்சாரம் தவிர்க்கப்பட வேண்டும். இதனைக் களைய நிறைய தொழில் வாய்ப்புகள் இளைஞர்களுக்காக உருவாக்கப்பட வேண்டும். அதற்கு ஏற்றாற்போல, இந்திய இளைஞர்களுக்கு தொழில்திறன் பயிற்சியும் அதிக அளவில் அளிக்கப்பட வேண்டும். அத்துடன், போதிய சமய ஞானமும் நம் இளைஞர்களுக்கு இளம் பருவத்தில் இருந்தே போதிக்கப்பட வேண்டும்” என்றும் வேதமூர்த்தி தனதுரையில் கூறினார்.

நம்பிக்கைக் கூட்டணி ஆட்சியில் பலவகை முன்னேற்றத் திட்டங்களுக்கு அரசு முன்னுரிமை அளித்துவரும் தற்போதைய காலக்கட்டத்தில், மக்களும் அதற்கேற்ப தங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான பொன்.வேதமூர்த்தி தன்னுடைய உரையில் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் புக்கிட் செலம்பாவ் தொகுதி பிகேஆர் சட்டமன்ற உறுப்பினர் ரெ.சண்முகம், சிடாம் தொகுதி பி.கே.ஆர். மக்கள் பிரதிநிதி டாக்டர் ரோபர்ட் லிங் குய் ஈ, மெர்போக் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் நோர் அஸ்ரினா பிந்தி சூரிப் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

பாரா அம்பெய்தும் போட்டி உலக வெற்றியாளர் சுரேஷ் செல்வத்தம்பிக்கு சிறப்பு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியில், சமுதாய ஆர்வலர்கள், பொது இயக்கங்களைச் சேர்ந்தவர்கள், பொது மக்கள் என பலதரப்பட்ட மக்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.