Home One Line P1 15-வது பொதுத் தேர்தலுக்குப் பின் நாங்களே ஆட்சி அமைப்போம் – சாஹிட் சூளுரை

15-வது பொதுத் தேர்தலுக்குப் பின் நாங்களே ஆட்சி அமைப்போம் – சாஹிட் சூளுரை

1078
0
SHARE
Ad
மஇகா மாநாட்டில் சாஹிட் – அருகில் துன் சாமிவேலு

கோலாலம்பூர் – நேற்று சனிக்கிழமை தொடங்கிய மஇகாவின் 73-வது பொதுப் பேரவையை இன்று அதிகாரபூர்வமாகத் தொடக்கி வைத்து உரையாற்றிய அம்னோ தேசியத் தலைவரும், தேசிய முன்னணியின் தலைவருமான டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹமிடி, அடுத்து வரும் 15-வது பொதுத் தேர்தலில் வாகை சூடி தேசிய முன்னணியே மீண்டும் ஆட்சி அமைக்கும் என சூளுரைத்தார்.

ஆட்சி மாற்றத்திற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருப்பதால் மஇகாவினர் அதற்காகத் தயாராகும்படி கேட்டுக் கொண்ட சாஹிட், எனினும் அந்த மாற்றத்திற்காக நாம் கடுமையாகப் பாடுபட வேண்டும் என்றும் கூறினார்.

முன்னதாக சிறப்பாகத் தலைமையுரையாற்றிய மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரனுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அனைவரும் எழுந்து நின்று கரவொலி எழுப்பவும் சாஹிட் மஇகா பேராளர்களைக் கேட்டுக் கொண்டார்.

#TamilSchoolmychoice

கட்சியின் முன்னாள் தேசியத் தலைவர் துன் சாமிவேலுவுக்கும் அவ்வாறே நன்றி தெரிவிக்கும் வகையில் அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தும்படி சாஹிட் வேண்டுகோள் விடுத்தார்.

15-வது பொதுத் தேர்தலுக்குப் பின் புத்ரா ஜெயா செல்வோம்

15-வது பொதுத் தேர்தலில் இந்தியர்களின் வாக்குகள் மீண்டும் திரும்ப மஇகா தலைவர்கள் பாடுபட வேண்டும் என்றும் கூறிய சாஹிட், அதனை விக்னேஸ்வரன் செய்வார் என்றும் அவருக்கு துணைத் தலைவர் டத்தோஸ்ரீ சரவணன் துணைநிற்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

ஒரு கட்டத்தில் “எதிர்கால அமைச்சர் போலவே விக்னேஸ்வரன் பேசுகிறார்” என்றும் சாஹிட் நகைச்சுவையாகக் கூறினார்.

தெய்வீக அனுக்கிரகமாக நாம் அனைவரும் மீண்டும் இணைந்து அரசியலில் பாடுபடும் வாய்ப்பு அமைந்திருக்கிறது என்ற சாஹிட் அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றியடைய பாஸ் கட்சியின் பங்களிப்பு மிகவும் முக்கியம் என்றும் மஇகா பேராளர்களுக்கு நினைவூட்டினார்.

மஇகாவும் பாஸ் கட்சித் தலைவர்களும் இணைந்து நடத்திய சந்திப்பு குறித்து தாம் மிகவும் மகிழ்ச்சியடைவதாகத் தெரிவித்த சாஹிட், சிரித்துக் கொண்டே, “கூடிய விரைவில் மசீச தலைவர் வீ கா சியோங்கும் அவ்வாறு செய்வார் என நம்புகிறேன்” என மேடையில் வீற்றிருந்த மசீச தலைவர் வீ கா சியோங்கைப் பார்த்துக் கூறினார்.

தேசிய முன்னணி கட்சிகள் தங்களைத் தானே சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் எங்கே தவறு செய்தோம் என்பதை நமக்கு நாமே கேட்டுக் கொண்டு அதற்கேற்ப செயலாற்ற வேண்டும் என்றும் சாஹிட் மேலும் கேட்டுக் கொண்டார்.

ஜாகிர் நாயக் விவகாரம்

தொடர்ந்து உரையாற்றிய சாஹிட், புனித குரானின் வாசகம் ஒன்றை மேற்கோள் காட்டி, “இஸ்லாம் மற்ற மதங்களை மதிக்கிறது. நமது மதத்தை எப்படி மதிக்கிறோமோ அவ்வாறே மற்ற மதங்களையும் நாம் மதிக்க வேண்டும் என இஸ்லாம் கூறுகிறது” என்றார்.

“ஆட்சியிலிருக்கும் நம்பிக்கைக் கூட்டணி தங்களை ஏமாற்றி விட்டது என்பதை மக்கள் இப்போது உணரத் தொடங்கியிருக்கிறார்கள். அதே வேளையில் தேசிய முன்னணி கொண்டு வந்த அனைத்து நல்ல திட்டங்களையும் அப்படியே பெயரை மட்டும் மாற்றிக் கொண்டு இவர்கள் செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்” எனவும் சாஹிட் சுட்டிக் காட்டினார்.

தேசிய முன்னணி முதலில் அம்னோ, மசீச, மஇகா என்ற மூன்று கட்சிகளுடன்தான் தோற்றம் கண்டது என நினைவுறுத்திய சாஹிட், நாளடைவில் 14 கட்சிகளாக விரிவடைந்து தற்போது மீண்டும் நமது அடித்தளமான அதே மூன்று கட்சிகளுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்றார். இந்த மூன்று கட்சிகளும் பாஸ் கட்சியுடன் இணைந்து மீண்டும் புத்ரா ஜெயாவைக் கைப்பற்றுவோம் என்றும் அவர் மேலும் சூளுரைத்தார்.

தனது உரைக்குப் பின்னர் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் மஇகாவின் சாதனைகள் குறித்த சிறப்பு நூலையும் வெளியிட்டார் சாஹிட். 1946 முதல் 2018 வரையிலான மஇகாவின் சாதனைகளை இந்த நூல் பட்டியலிடுகிறது.

மஇகாவின் அதிகாரபூர்வ இணையத் தளத்தையும் சாஹிட் தொடக்கி வைத்தார். மஇகா தேசியத் தலைவர் விருதுகளைப் பெற்றவர்களுக்கும் சாஹிட் பரிசுகள் எடுத்து வழங்கினார்.

மஇகாவின் புதிய இணையத் தளம்

இன்றைய மஇகா பொதுப் பேரவையில் தேசிய முன்னணியின் தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான் பாஸ் கட்சியின் தலைமைச் செயலாளர் தக்கியுடின், பாஸ் உதவித் தலைவரும் உலாமா மன்றத்தின் தலைவருமான சவாவி சாலே, மசீச தலைவர் வீ கா சியோங் ஆகியோர் உள்ளிட்ட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.