சென்னை: கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியான “மாநகரம்” படத்தினை இயக்கிய லோகேஷ் கனகராஜ், தற்போது நடிகர் கார்த்தியை வைத்து “கைதி” என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் முன்னோட்டக் காணொளி இரண்டு மாதங்களுக்கு முன்பு வெளியாகி தமிழ் இரசிகர்களிடம் அமோக ஆதரவு பெற்று வருகிறது. கார்த்தியின் மிரட்டலான நடிப்பு இப்படத்திற்கு பக்க பலமாக அமைந்துள்ளது.
தற்போது இப்படம் அக்டோபர் மாதம் வெளியாகும் என்று நேற்று செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், இப்படம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரயிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, தீபாவளிக்கு விஜய்யின் பிகில் படம் வெளியாக இருக்கிறது என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். இந்தப் படத்திற்கு போட்டியாக விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள சங்கத்தமிழன் படமும் வெளியாக இருக்கிறது என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
இரு படங்களுமே பெரிய இரசிகர் மக்களைக் கொண்ட கூட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்விரு படங்களின் வசூல் பாதிக்கப்படும் என்று பலரும் கூறி வந்த நிலையில், மூன்றாவதாக கார்த்தியின் கைதி படமும் இந்த பட்டியலில் இணைந்துள்ளது. தீபாவளி மாதம் நெருங்கிக் கொண்டிருக்கையில் மேலும் சில படங்களும் இப்பட்டியலில் இடம்பெறும் வாய்ப்புகள் உள்ள அதே வேளையில், ஒரு சில படங்கள் பின்வாங்கும் நிலையும் ஏற்படும்.