கோலாலம்பூர்: இன்று புதன்கிழமை, அரா டாமான்சாராவில் உள்ள தனியார் கல்லூரியான ஏரோநாட்டிக் எனப்படும் விமானம் செலுத்துதல் பயிற்சி மையக் கல்லூரியின் நிருவாகமும், ஏரோநாட்டிக் பயிற்சி மையத்தைச் சேர்ந்த 22 மாணவர்களும், கலந்துரையாடல் ஒன்றினை மனிதவளத்துறை அமைச்சில் மேற்கொண்டனர்.
ஆயினும், இந்தக் கூட்டத்தினுள் ஷரன் ராஜ் அனுமதிக்கப்படக்கூடாது என்று கல்லூரி நிருவாகம் கேட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. அதன்படியே, ஷரன் ராஜ் இச்சந்திப்பில் கலந்துக் கொள்ளாமல், பெற்றோர்களை உள்ளே அனுமதிக்கும்படி கோரியுள்ளார்.
சந்திப்பின் இறுதியில், ஏரோநாட்டிக் பயிற்சி மையக் கல்லூரியின் மாணவர் அமைப்பின் தலைவர் மற்றும் செயலாளரை மீண்டும் கல்வியைத் தொடர கல்லூரி நிருவாகம் ஏற்றுக் கொண்டதாக மாணவர் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், அங்கு பயிலும், மாணவர்களுக்கான பிடிபிகே கடன் உதவி விரைவில் பெற்றுத் தரப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தலையீட்டு கல்லூரி நிருவாகத்திற்கும் மாணவர்களுக்குமிடையே உள்ள கருத்து வேறுபாட்டினை தீர்க்க முயற்சி எடுத்த மனிதவளத்துறை அமைச்சர் எம். குலசேகரன் மற்றும் பிஎஸ்எம் கட்சியின் ஷரன் ராஜ் அவர்களுக்கு மாணவர் அமைப்பு நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.
கடந்த திங்கட்கிழமை அரா டாமான்சாராவில் உள்ள ஒரு தனியார் கல்லூரியின் நிருவாகத்தை எதிர்த்து, போராட்டம் நடத்திய ஏழு ஏரோநாட்டிக் பயிற்சி மைய மாணவர்கள் (ஏஏடிசி) காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு பின்பு விடுவிக்கப்பட்டனர்.
பிஎஸ்எம் கட்சியின் மத்திய குழு உறுப்பினரான ஷாரன் ராஜ் என்பவரும் இதில் கைது செய்யப்பட்டார். இவர் இப்பயிற்சி மையத்தின் மாணவர் அமைப்பின் ஆலோசகர் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, பயிற்சி மையத்தின் உரிமையாளர் மாணவர்களுடன் கலந்தாலோசிக்க மறுத்து, அவர்களை கைது செய்ய காவல் துறையினரை அழைத்ததாகக் கூறப்பட்டது. மாணவர்களின் கூற்றுபடி, மாணவர் சங்கங்களில் ஈடுபட்டதற்காக நிருவாகம் இரண்டு மாணவர்களை நீக்கம் செய்ததன் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.