கோலாலம்பூர்: நேற்று திங்கட்கிழமை அரா டாமான்சாராவில் உள்ள ஒரு தனியார் கல்லூரியின் நிருவாகத்தை எதிர்த்து, போராட்டம் நடத்திய ஏழு ஏரோநாட்டிக் பயிற்சி மைய மாணவர்களை (ஏஏடிசி) காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
பிஎஸ்எம் கட்சியின் மத்திய குழு உறுப்பினரான ஷாரன் ராஜ் என்பவரும் இதில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் இப்பயிற்சி மையத்தின் மாணவர் அமைப்பின் ஆலோசகர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிஎஸ்எம் பொதுச் செயலாளர் ஏ.சிவராஜன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையின்படி, மாணவர் சங்கத்தை அடக்குவதாகக் கூறப்படும் நிருவாகத்தை மாணவர்கள் எதிர்த்தனர் என்று குறிப்பிட்டிருந்தார்.
“பயிற்சி மையத்தின் உரிமையாளர் மாணவர்களுடன் கலந்தாலோசிக்க மறுத்து, அவர்களை கைது செய்ய காவல் துறையினரை அழைத்துள்ளனர். அவர்கள் கிளானா ஜெயா காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்” என்று சிவராஜன் தெரிவித்தார்.
இந்த போராட்டம் பிற்பகல் 3 மணிக்கு தொடங்கியது என்றும் சுமார் 90 மாணவர்கள் கலந்து கொண்டனர் என்று கூறப்பட்டது.
மாணவர்களின் கூற்றுபடி, மாணவர் சங்கங்களில் ஈடுபட்டதற்காக நிருவாகம் இரண்டு மாணவர்களை நீக்கம் செய்ததன் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது .
பெட்டாலிங் ஜெயா துணை காவல் துறைத் தலைவர் கு மஷாரிமான் கு மஹ்மூட், ஷாரன் மற்றும் ஏழு மாணவர்கள் கைதானதை உறுதிப்படுத்தினார். அவர்கள் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 186-இன் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றார்.
குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 10,000 ரிங்கிட் வரை அபராதமும் அல்லது இரண்டுமே விதிக்கப்படும்.