கோலாலம்பூர்: நாளை சனிக்கிழமை கொண்டாடப்பட இருக்கும் 62-வது சுதந்திரத் தினம் கடந்த ஆண்டை விட குறைவான உற்சாகத்தை அளித்துள்ளது எனும் கருத்தினை பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் ஒப்புக் கொண்டார்.
கடந்த ஆண்டு அரசாங்கத்தை மாற்றுவதில் மக்கள் பெற்ற வெற்றியின் உணர்வுகளின் அடிப்படையில் தேசிய தினம் மிகவும் மகிழ்ச்சியாகக் கொண்டாடப்பட்டது என்று பிரதமர் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், தேசிய முன்னணி அரசாங்கத்திற்குப் பதிலாக நம்பிக்கைக் கூட்டணியைத் தேர்வு செய்ததற்கான முடிவை மக்கள் எதிர்பார்த்துக் காத்திருப்பதால் இவ்வாண்டு வேறுபட்டிருக்கிறது என்று அவர் கூறினார்.
“இந்த ஆண்டு மக்கள் தங்கள் வாக்கு முடிவுகளுக்காக காத்திருக்கிறார்கள், ஆனால் 14-வது பொதுத் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவது எளிதான காரியமல்ல” என்று அவர் பெர்சாத்துக் கட்சியின் உச்சமட்டக் சந்திப்புக் கூட்டத்தில் நேற்று வியாழக்கிழமைத் தெரிவித்தார்.
ஆட்சி மாற்றத்தின் ஆரம்ப நாட்களில், தேசிய முன்னணி அரசாங்கம் நம்பிக்கைக் கூட்டணி அரசுக்கு விட்டுச்சென்ற உண்மையான நிதி நிலை குறித்து தாங்கள் அறிந்திருக்கவில்லை என்று பிரதமர் கூறினார்.
“அந்த நேரத்தில் நாட்டின் நிதி நிலைமை, அரசாங்கத்திடம் எவ்வளவு பணம் இருந்தது என்பது பற்றிய முழு தகவல் எங்களிடம் இல்லை. நாடு 1 டிரில்லியன் ரிங்கிட் கடன்பட்டிருப்பது தெரியாது. மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியும், தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்படும் என்று நம்புகிறார்கள், ஆனால் அதை செயல்படுத்த நேரம் எடுக்கும். அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்ற எங்களால் முடிந்தவரை முயற்சிப்போம், ஆனால் மக்களின் ஆதரவை வாங்குவதற்கு அரசாங்கத்திடம் பணம் இல்லை” என்று பிரதமர் தெரிவித்தார்.