கோலாலம்பூர்: அலாம் மெகாவில் ஒரு பயணப்பையில் இறந்து கிடந்ததாக நம்பப்படும் ஒரு பெண்ணின் கணவர், அதே நிலையில் மேலும் ஒரு பயணப்பையில் கண்டெடுக்கப்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
கண்டெடுக்கப்பட்ட சடலம் லிம் கோக் ஹோவின் உடல் என்று நம்பப்படுகிறது. முன்னதாக, அவ்வாடவரின் மனைவியான டான் சீவ் மீ (52), அதே இடத்தில் பயணப்பையில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
டானின் மரணம் தொடர்பாக முன்னர் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்கள், இரண்டாவது சடலத்தைக் கண்டுபிடிப்பதற்கு காவல் துறைக்கு வழிவகுத்ததாக ஷா அலாம் காவல் துறைத் துணைத் தலைவர் பாஹாருடின் மாட் தாயிப் தெரிவித்தார்.
கோத்தா கெமுனிங்கில் கைது செய்யப்பட்ட அச்சந்தேக நபர்கள் வெளிநாட்டவர்கள் என்றும், லிம் வீட்டின் வாடகைதாரர்கள் என்று நம்பப்படுவதாகவும் அவர் கூறினார்.
இந்த கொலைச் சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் மற்றும் மற்ற முக்கியமான ஆதாரங்களை சேகரிப்பதில் காவல் துறை மும்முரமாக இயங்கி வருவதாக அவர் கூறினார்.
டான் இங்குள்ள சுபாங் ஜெயாவில் உள்ள ஒரு பேராங்காடியில் உணவக மேலாளராக பணிபுரிந்து வருவதாக பாஹாருடின் கூறினார்.
முன்னதாக கண்டெடுக்கப்பட்ட டானின் பிரேத பரிசோதனையில், அவர் மார்பு மற்றும் வயிற்றுப்பகுதியில் 13 குத்துக் காயங்களுக்கு ஆளானதாகத் தெரிவிக்கப்பட்டது. மேலும், கழுத்தில் வெட்டப்பட்ட காயமும் காணப்பெற்றதாகவும், கூர்மையான ஆயுதம் இதில் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்றும் நம்பப்பட்டது.
“இறப்புக்கான காரணம் அடிவயிற்றில் பல குத்து காயங்கள் தான், மற்றும் திங்களன்று அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டபோது 72 மணி நேரத்திற்கு முன்னர் இறந்துவிட்டதாக நம்பப்படுகிறது. இன்றுவரை, பாதிக்கப்பட்டவரின் உடல் இன்னும் கிள்ளாங்கில் உள்ள தெங்கு அம்புவான் ராஹிமா மருத்துவமனையில் உள்ளது, அது இன்னமும் உரிமை கோரப்படவில்லை” என்று பாஹாருடின் நேற்று வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் கூறினார்.
கடந்த வெள்ளிக்கிழமை முதல் தனது நண்பரை தொடர்பு கொள்ள முடியாததால் பாதிக்கப்பட்டவரின் நண்பர் கடந்த சனிக்கிழமை யுஎஸ்ஜே8 காவல் நிலையத்தில் புகார் அறிக்கையை பதிவு செய்ததாக அவர் குறிப்பிட்டார்.
ஆரம்பக்கட்ட விசாரணையில், அந்த பெண்ணின் உடலில் அவரது மதிப்புமிக்க பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதால், அவர் கொள்ளை சம்பவத்தினால் பாதிக்கப்பட்டவர் அல்ல என்பதும் தெரியவந்துள்ளது.
கொலைக்கான தண்டனைச் சட்டம் பிரிவு 302-இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாகவும், அதன் நோக்கம் குறித்த விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் பாஹாருடின் தெரிவித்தார்.