Home One Line P2 திரைவிமர்சனம்: “சாஹோ” – பிரம்மாண்டம் மட்டும் இரசிக்கலாம் – பாகுபலி பிரபாஸ் தந்த ஏமாற்றம்!

திரைவிமர்சனம்: “சாஹோ” – பிரம்மாண்டம் மட்டும் இரசிக்கலாம் – பாகுபலி பிரபாஸ் தந்த ஏமாற்றம்!

757
0
SHARE
Ad

கோலாலம்பூர் – பாகுபலி படங்களுக்குப் பிறகு உலக அளவில் இந்திய இரசிகர்களிடையே மொழி வித்தியாசமின்றி பிரபலமாகிவிட்ட பிரபாசை மட்டுமே முதலீடாகக் கொண்டும், பெரும் பொருட் செலவிலான பிரம்மாண்டத்தையும் நம்பியும் நீண்ட காலமாக எடுக்கப்பட்டு வந்த “சாஹோ” திரைப்படம் பெருத்த ஏமாற்றத்தைத் தருகிறது.

3500 மில்லியன் ரூபாய் செலவில், இந்தி, தெலுங்கு, தமிழ் என மூன்று மொழிகளில் உலகம் எங்கும் வெளியாகியிருக்கும் இந்தப் படம், முதல் மூன்று நாட்களில் இந்தியாவில் மிகப் பெரிய வசூலை வாரிக் குவித்திருக்கிறது.

ஆனால், சமூக ஊடகங்களில், படத்தைக் கடுமையாக விமர்சித்து கிழி, கிழியென கிழித்துக் கொண்டிருக்கிறார்கள் இணையவாசிகள்.

#TamilSchoolmychoice

பிரபாஸ் ஸ்டைலாக நடித்திருந்தாலும், அவர் வரும் காட்சிகளில் எல்லாம் சில நாட்களுக்கு சவரம் செய்யப்படாத முகத்துடன் எப்போதும் அயர்ச்சியுடனும், களைப்புடனும் காணப்படுகிறார். சண்டைக் காட்சிகளிலும், கார், மோட்டார் சைக்கிள் ஓட்டும் காட்சிகளிலும், அந்தரத்தில் பறக்கும் காட்சிகளிலும் மட்டும் கொஞ்சம் இரசிக்க வைக்கிறார். மற்றபடி அவரைப் பார்க்கும் போதெல்லாம் அவரது பாகுபலி கதாபாத்திரங்கள் தான் கண்முன் நிழலாடுகின்றன.

ஓட்டைகள் அதிகம் கொண்ட திரைக்கதை

எங்கேயோ ஆரம்பித்து எங்கேயோ முடியும் மிக நீண்ட திரைக்கதை. பல இடங்களில் குழப்பம். திருப்பங்களைக் காட்டும்போது ஆச்சரியப்பட வைப்பதற்கு பதிலாக எப்படி இப்படி நடந்திருக்கும் என நம்மால் நம்ப முடியவில்லை.

ஒரு மிகப் பெரிய கள்ளக்கடத்தல் கும்பல் இந்தியாவுக்குள் தங்களின் வணிகத்தையும், கொடியையும் நாட்டுவதற்கு மும்பையினுள் நுழைவதில் தொடங்குகிறது படம். தாதா கூட்டத்தின் தலைவனான ஜேக்கி ஷரோப் கார் விபத்தில் கொல்லப்பட, அடுத்து அவரது மகன் அவரது இடத்தை எடுப்பார் என்கிறார்கள். ஆனால் மகனாகக் காட்டப்படும் அருண் விஜய் இறுதியில் உண்மையான மகன் அல்ல என்கிறார்கள். யார் அந்த மகன் என்பதுதான் படத்தின் உச்சகட்டத் திருப்பம்.

இன்னொரு கோணத்தில் பிரபாசை முதலில் காவல் துறை அதிகாரி அசோக் சக்கரவர்த்தி என்கிறார்கள். அவரும் காவல் துறையினருடன் இணைந்து வேலை செய்கிறார். பாதிப்படத்தில் அவர்தான் உண்மையான திருடன் சித்தார்த் நந்தன் சாஹோ என்கிறார்கள். நாம் வில்லன் என நினைத்துக் கொண்டிருக்கும் நீல் நிதின் முகேஷை (கத்தி படத்தில் விஜய்க்கு வில்லனாக வந்த இந்தி நடிகர்) பின்னர் அவர்தான் உண்மையான போலீஸ் அசோக் சக்கரவர்த்தி என்கிறார்கள். இப்படியாக எல்லாருமே ஆள்மாறாட்டம் செய்கிறார்கள்.

அத்தனை காவல் துறையினரும் திருடன் என்று தெரியாமலா பிரபாசுடன் இணைந்து வேலை செய்கிறார்கள்? நமது காதுகளில் சரியான பூச்சுற்றல்!

காவல் துறையினரின் ஒவ்வொரு அதிகாரியும் ஒவ்வொரு வில்லனுக்குக் கையாளாகச் செயல்படுவதாகக் காட்டி மொத்த இந்தியக் காவல் துறையையும் கேவலப்படுத்தியிருக்கிறார்கள்.

வலுவில்லாத திரைக்கதையில், போலீஸ் அதிகாரியாக வரும் ஷரடா கபூர், பிரபாஸ் இடையிலான காதலும் ஓர் அத்தியாயம்.

கவரும் மற்ற அம்சங்கள்

படத்தின் தொடக்கம் முதலே அதன் பிரம்மாண்டமும் அசத்தலான காட்சிகளும் கவர்கின்றன. ஒளிப்பதிவாளர் மதி (தமிழ் நாட்டுக்காரர் – பல தமிழ்ப் படங்களின் ஒளிப்பதிவாளர்) மிகவும் பாடுபட்டிருக்கிறார். விரட்டும் காட்சிகளில், நவீனமான ஹெலிகாப்டர், பெரிய மோட்டார் சைக்கிள்கள், விலையுயர்ந்த கார்கள் எல்லாம் மோதித் தெறிக்கின்றன. போதாக் குறைக்கு, ஜெட்மேன் என்ற நவீனத் தொழில் நுட்பத்தில் மனிதர்கள் இறக்கை கட்டிக் கொண்டு பறக்கும் தொழில் நுட்பத்தையும் புகுத்தியிருக்கிறார்கள்.

பிரபாஸ் – நீல் நிதின் முகேஷ் – ஷரடா கபூர்

இவையெல்லாம் எடுத்த எடுப்பில் கவர்ந்தாலும், போகப் போக ஏன் இதற்கெல்லாம், எங்கே கதை – அதுவும் காட்டப்படுகின்ற  கதையில் ஏன் இத்தனை குழப்பம் எனக் கேள்வி கேட்கத் தோன்றுகிறது.

படத்தின் குளிர்ச்சியான, கவர்கின்ற இன்னொரு அம்சம் இளமையும் அழகும் இணைந்த கதாநாயகி ஷரடா கபூர். பிரபல இந்தி நடிகையான இவர், பார்ப்பதற்கு சில காட்சிகளில் பிரபாசுக்குத் தங்கை போலத் தெரிந்தாலும், தனது அழகாலும், கவர்ச்சியாலும் கவர்கின்றார்.

பாடல்கள் சுமார் இரகம். அதிலும் தமிழ்ப் படுத்தியிருப்பதால் சில இடங்களில் கோரமாக ஒலிக்கிறது.

படத்தொகுப்பை ஸ்ரீகர் பிரசாத் சிறப்பாகக் கையாண்டிருந்தாலும், ஒட்டாத திரைக்கதையை அவரால் ஒப்பேற்ற முடியவில்லை.

பிரம்மாண்டமான அரங்குகள், உயரமானக் கட்டடங்களோடு கூடிய காட்சிகள், கார், மோட்டார் சைக்கிள் விரட்டல்கள், சண்டைக்காட்சிகள், என இரசிப்பவர்கள் மட்டும் இந்தப் படத்தைப் பார்க்கலாம்.

-இரா.முத்தரசன்