மாஸ்காவ்: இன்று வியாழக்கிழமை பிற்பகல் தொடங்கும் மூன்று நாள் கிழக்கு பொருளாதார உச்சமாநாட்டிற்கு முன்னதாக பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இருதரப்பு சந்திப்பை நடத்தினர்.
ரஷ்யாவின் தூர கிழக்கில் அமைந்துள்ள முக்கிய துறைமுக நகரத்தில் நடைபெற்று வரும் பொருளாதார மன்றத்தில் நேற்று புதன்கிழமை வந்தடைந்த பிரதமர் மற்றும் மோடி ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
இதனிடையே, பயங்கரவாதம் மற்றும் பணமோசடிகளை தூண்டுவதற்காக இந்தியாவில் விரும்பப்படும் சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக்கை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்டிடம் கேட்டுக் கொண்டதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து, பிரதமர் மகாதீர் முகமட் ஏதேனும் உத்தரவாதம் அளித்தாரா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை, ஆயினும், இரு தலைவர்களும் இந்த விவகாரத்தில் அதிகாரிகள் தொடர்பில் இருப்பார்கள் என்று முடிவு செய்தனர்.
“இந்த விவகாரம் தொடர்பாக எங்கள் அதிகாரிகள் தொடர்பில் இருப்பார்கள் என்று இரு கட்சிகளும் முடிவு செய்துள்ளன, இது எங்களுக்கு ஒரு முக்கியமான பிரச்சனை” என்று இந்திய வெளியுறவு செயலாளர் விஜய் கோகலே தெரிவித்துள்ளார்.
இரு தலைவர்களுக்கும் இடையிலான இரண்டாவது சந்திப்பு இதுவாகும். கடந்த ஆண்டு மே 31-ஆம் தேதி இந்தியப் பிரதமர் புத்ராஜெயாவில் டாக்டர் மகாதீரை சந்தித்தபோது முதல் கூட்டம் நடைபெற்றது.