கோலாலம்பூர்: வெளியிடப்படும் செய்தி அறிக்கைகளில் திருப்தி இருந்தால் அனைத்து தரப்பினரும் சரியான முறையில் அவற்றை தீர்வுக் காண முன்வர வேண்டும் என்று மலேசிய பத்திரிகை நிறுவனத்தின் (எம்பிஐ) தலைவரும், தலைமை நிருவாக அதிகாரியுமான டத்தோ டாக்டர் சாமில் வாரியா தெரிவித்தார்.
பத்திரிகையாளர்கள் தங்கள் அறிக்கைகளில் முன்வைத்த வாதங்களுக்கு பதிலளிக்க ஒவ்வொரு நபருக்கும் உரிமை உண்டு என்றும் அச்சுறுத்தல்கள் ஓர் ஆயுதமாகப் பயன்படுத்த வேண்டாம் என்றும் அவர் கூறினார்.
“பத்திரிகையாளர்களை அச்சுறுத்தும் விஷயங்கள் நடக்கக்கூடாது, ஏனென்றால் அவர்கள் தங்கள் வேலையைச் செய்கிறார்கள். அவ்வாறான அறிக்கைகளால் பாதிக்கப்பட்டவர்கள் பதிலளிக்கும் உரிமை உண்டு. அவரைப் பற்றி அறிவிக்கப்பட்டதற்கு பதிலளிக்க அவர் ஊடக அமைப்பு அல்லது பத்திரிக்கையாளரை அழைக்க முடியும். நாகரிக சமுதாயத்தில், அது அப்படித்தான் இருக்க வேண்டும்,” என்று பெர்னாமாவிடம் இன்று வெள்ளிக்கிழமை தொடர்பு கொண்டபோது அவர் கூறினார்.
அண்மையில் பெரிதா ஹாரியான் பெண் பத்திரிகையாளர் மின்னஞ்சல் மூலம் கொலை அச்சுறுத்தலைப் பெற்றார்.
இதற்கிடையில், தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சர் கோபிந்த் சீங், ஊடக பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ஒரு நிலையான இயக்க முறைமையை (எஸ்ஓபி) நிறுவ ஊடக நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாகக் கூறினார்.