கோலாலம்பூர்: தாம் பிரதமராக இருக்கும் வரையில் அமைச்சரவையில் மறுசீரமைப்பு இருக்காது என்பதை பிரதமர் மகாதீர் முகமட் நேற்று செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தியுள்ளார்.
பிஎஃப்எம் வானொலி நிகழ்ச்சியில் இது குறித்து பேசிய பிரதமர், தற்போதைய அமைச்சர்கள் அனைவரும் பணிக்கு புதியவர்கள் என்று கூறினார்.
கல்வி அமைச்சர் டாக்டர் மஸ்லீ மாலிக்கை மாற்றுவது குறித்து பரிசீலிக்கப்படுமா என்று கேட்டதற்கு, இல்லை என்று அவர் பதிலளித்தார்.
“நான் ஓர் அமைச்சரை மாற்றி ஒரு புதிய அமைச்சரை எடுத்துக் கொண்டால்.., அவர்கள் அனைவரும் புதியவர்கள். தற்போதைய அமைச்சருக்கு ஒரு வருட அனுபவம் கிடைத்துள்ளது.” என்று அவர் குறிப்பிட்டார்.
புதிய அமைச்சரைப் பெற்றுவிட்டால் நல்லது என்று அர்த்தமல்ல என்று பிரதமர் கூறினார்.
ஒரு புதிய பிரதமர் தமக்குப் பின் வந்த பிறகு, ஒரு புதிய அமைச்சரவை இருக்கலாம் என்று அவர் கூறினார்.
எவ்வாறாயினும், அமைச்சரவை மறுசீரமைப்பு இருக்கும் போதெல்லாம், அதிகமான சிக்கல்கள் உருவாக்கப்படும் என்றும், அது எந்தப் பிரச்சனையையும் தீர்க்கப்போவதில்லை என்றும் அவர் கூறினார்.
“அதனால்தான் எனது பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காக, அமைச்சர்களை மாற்றுவது குறித்து நான் அதிக அக்கறை காட்டவில்லை” என்று அவர் கூறினார்.
இந்நேர்காணலின் போது, தாம் ஓர் இடைக்கால பிரதமராக மட்டுமே இருப்பார் என்ற வாக்குறுதியை மீண்டும் அவர் தெளிவுப்படுத்தினார்.
“நான் ஓர் இடைக்கால பிரதமராக இருப்பேன் என்று உறுதியளிக்கிறேன். நான் அவ்வாறு செய்வேன். நான் எனது வாக்குறுதியை நிறைவேற்றுவேன். ஆனால் ஒப்படைப்பதற்கு முன்பு பெரும்பாலான முக்கிய பிரச்சனைகளை நான் தீர்ப்பதை உறுதி செய்ய வேண்டும். ஒரு நிலையான காலம், எனது வேலையை செய்வதை கடினமாக்கிவிடும்,” என்று அவர் கூறினார்.