புது டில்லி: இந்தியாவில் தொடர்ந்து வந்த தொடர் இனம், மத ரீதியிலான கும்பல் கொலைகள் போன்ற சம்பவங்களினால் அந்நாட்டில் வாழ்வதற்கான தகுதியை குறைத்து வருவதாக இந்தியத் திரைப்பட இயக்குனர்களான மணிரத்னம், அனுராக் காஷ்யப் மற்றும் அடூர் கோபால கிருஷ்ணன் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருந்தனர்.
மேலும், நடிகை கொங்கனா சென் ஷர்மா, வரலாற்றாசிரியர் ராம சந்திர குஹா, நடிகை ரேவதி உள்ளிட்டோரும் இணைந்து இந்தக் கடிதத்தை எழுதியிருந்தனர்.
இத்தகைய சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று தெரிவித்ததோடு, நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி இது குறித்து கண்டனம் தெரிவித்ததோடு, அதனை தீர்க்க என்ன நடவடிக்கை எடுத்துள்ளார் என்ற கேள்விகளை எழுப்பியிருந்தனர்.
தற்போது, இது குறித்து இவர்கள் மீது வழக்கு பதிவுச் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் மிஜாப்பூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் இவர்களுக்கு எதிராக புகார் மனுவைக் கொண்டு வந்துள்ளார்.
இந்த புகார் மனுவை விசாரித்த மிஜாப்பூர் தலைமை நீதிபதி சூர்யா காந்த் திவாரி மனுவை ஏற்று மணிரத்னம் உள்ளிட்ட 49 பேர் மீது வழக்குப் பதிவு செய்திட நேற்று வியாழக்கிழமை உத்தரவிட்டார். இதனை அடுத்து, பீகாரில் உள்ள சர்தார் காவல் நிலையத்தில் 49 பேர் மீதும் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சூழலில் விரைவில், பீகார் காவல் துறையினர் மணிரத்னம் உட்பட 49 பேரை கைது செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.