Home One Line P1 “மலாய் தன்மான மாநாடு ஒற்றுமைக்கானது அல்ல!”- இராமசாமி

“மலாய் தன்மான மாநாடு ஒற்றுமைக்கானது அல்ல!”- இராமசாமி

831
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மலாய் தன்மான காங்கிரஸ் கூட்டத்தில், முக்கிய உந்துதலாக மலாய்க்காரர்களின் வளர்ச்சி, வறுமையை ஒழித்தல், அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தில் ஏற்படுத்தக் கூடிய சாதனைகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தியதாகத் தெரியவில்லை என்று பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமி சாடியுள்ளார்.

அக்கூட்டமானது மலாய்க்காரர் அல்லாதவர்களின் சமூக ஒப்பந்தத்தின் சவாலை கேள்விக்குள்ளாக்குவதில் கவனம் செலுத்தியதாகத் தெரிகிறது என்று அவர் கூறினார். இந்நாடு, மலாய்க்காரர்களுக்கு சொந்தமானது என்றும், மலாய்க்காரர்கள் அல்லாதவர்கள் அவர்களின் வரையறையை தாண்டக்கூடாது என்றும் கூறப்பட்டுள்ளதை அவர் சுட்டிக் காட்டினார்.

“இம்மாநாட்டில் சைனால் கிளிங்கின் தொடக்க உரையின் அடிப்படை உந்துதல் இதுவாக அமைகிறது. ஒரு முன்னாள் கல்வியாளரிடமிருந்து இம்மாதிரியான கருத்துகள் வருவது ஆச்சரியம் அளிக்கிறது. மேலும், அவர் தனது மாணவர்களுக்கு என்ன கற்பித்தார் என்றும் எனக்கு கேள்வியாக உள்ளது.” என்று அவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

சபா, சரவாக் மற்றும் தீபகற்ப மலேசியாவின் ஒராங் அஸ்லி மக்கள், இந்த இனவெறி கருத்துக்கு எவ்வாறு பிரதிபலிப்பார்கள் என்று தமக்கு ஆச்சரியமாக இருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“பிரதமர் மகாதீர் முகமட் வழக்கம் போல், ஒரு மலாய்க்காரர் மாநாட்டில் எப்படி இருக்க வேண்டுமோ, அவ்வாறே தனது பங்கைப் பாதுகாத்துக் கொண்டார். தனது உரையில், இம்மாநாடு சீனர்களையோ அல்லது இந்தியர்களையோ தாக்குவதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை, ஆனால் பல்வேறு அரசியல் பிளவுகளை கருத்தில் கொண்டு மலாய் ஒற்றுமையை நோக்கமாகக் கொண்டது என்று அவர் விளக்கியிருந்தார். ஆயினும், இது ஒற்றுமையை ஊக்குவிக்கும் மாநாடல்ல, மாறாக தன்மானத்தை பேசுகிற மாநாடு என்பதை அவர் அறிய தவறவிட்டிருக்கலாம்.” என்று அவர் பதிவிட்டிருந்தார்.

இந்த மாநாட்டில் இனவெறி, மலாய்க்காரர்கள் முன்னணி பதவிகளை நிரப்ப வேண்டும், ஒற்றை கல்வி முறையை அறிமுகப்படுத்துவதன் மூலம் சீனம் மற்றும் தமிழ்ப் பள்ளிகளை அகற்றுதல், பள்ளிகளில் ஜாவி வனப்பெழுத்தை அமல்படுத்துதல் போன்ற கருத்துகள் பேசப்பட்டன.

அம்னோவிற்கும் பாஸ் கட்சிக்கும் இடையிலான அரசியல் நல்லிணக்கக் கூட்டத்தில் கூட இந்த அளவிற்கு இனவெறி பேச்சுகள் இல்லை என்று இராமசாமி குறிப்பிட்டிருந்தார்.