கோலாலம்பூர்: மலாய்க்காரராக மட்டுமல்ல, தேர்ந்தெடுக்கப்படும் அமைச்சர்கள் திறமையான, போட்டி மிக்கவர்களாக இருக்க வேண்டும் என்று போர்ட் டிக்சன் நாடாளுமன்ற உறுப்பினரான அன்வார் இப்ராகிம் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்டவர்கள் மலாய்க்காரர்கள், பூமிபுத்ராக்கள் மற்றும் அனைத்து மலேசியர்களிடமும் அக்கறையுடன் இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
அரசாங்கத்தில் முக்கியமான பதவிகளை வகிக்கப்பதற்கு ஒருவருக்கு இது அவசியமான நிபந்தனைகளாக இருக்க வேண்டும் என்று பிகேஆர் கட்சித் தலைவருமான அவர் கூறினார்.
இன்று நாடாளுமன்ற வளாகத்தில் ஊடகங்களுடன் பேசிய அன்வார், இம்மாதிரியான பண்புள்ள எவரும் ஒரு முக்கியமான அல்லது மூலோபாய நிலையை வகிக்க அரசாங்கத்தால் நியமிக்கப்படுவதற்கு தகுதியானவர் என்றார்.
ஷா அலாமில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மலாய் தன்மான காங்கிரஸ் நிகழ்ச்சியின் போது நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில், நாட்டின் அனைத்து முக்கிய பதவிகளும் முஸ்லிம்களால் வழிநடத்தப்பட வேண்டும் என்று பாஸ் இளைஞர் துணைத் தலைவர் அகமட் பாட்லி ஷாரி தெரிவித்திருந்தார்.
பிரதமர், துணை பிரதமர், முதலமைச்சர்கள், மூத்த அமைச்சர்கள், நிதி அமைச்சர்கள் உட்பட பதவிகளில் முஸ்லிம்கள் இருக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.