கோலாலம்பூர் – தீபாவளியை முன்னிட்டு ஆண்டுதோறும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளை வழங்கி தொலைக்காட்சி இரசிகர்களைக் கவர்ந்து வரும் அஸ்ட்ரோ இந்த ஆண்டும் பல சிறப்பு நிகழ்ச்சிகளைப் படைப்பதற்கு அணிவகுத்து வருகிறது.
அந்த வரிசையில் ‘தீபாவளி அனல் பறக்குது’ எனும் புத்தம் புதிய சமையல் நிகழ்ச்சி அஸ்ட்ரோ வானவில் அலைவரிசை 201 மற்றும் அஸ்ட்ரோ கோ-வில் தற்போது ஒளியேறி வருகிறது.
இவ்வாண்டு தீபாவளிக்கு நம் வீட்டிற்கு வரும் விருந்தினருக்கு எந்த வகையான சுவையான உணவுகளைத் தயாரித்து உபசரிப்பது எனும் தகவல்கள் இந்நிகழ்ச்சியில் இடம்பெறும். அதோடு, அந்த உணவுகளை சமைக்கும் வழிமுறைகளையும் இந்நிகழ்ச்சியின் வழி கண்டு அறிந்து கொள்ளலாம்.
விழுதுகள் அறிவிப்பாளர் ரேவதி தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் ரசிக்க ருசிக்க பால கணபதி, நவி இந்திரன் பிள்ளை, நீருக்குள் நீண்ட நேரம் மூழ்கியிருக்கும் வித்தையில் மலேசியா சாதனையாளர் விருது பெற்ற விக்னேஸ்வரன் அழகு, மலேசியாவில் சமூக வலைத்தளங்களின் புகழ் நந்தினி பாலகிருஷ்ணன், ‘என் வீட்டுத் தோட்டத்தில்’ திரைப்படத்தின் கதாநாயகி ஜெயா கணேசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டுள்ளார்கள்.
கடந்த அக்டோபர் 14-ஆம் தேதி தொடங்கிய இந்நிகழ்ச்சியை ஒவ்வொரு நாளும் திங்கட்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை மாலை 4.30 மணிக்குக் கண்டு களிக்கலாம். இந்நிகழ்ச்சியின் மறு ஒளிபரப்பு இரவு 9.30 மணிக்கு ஒளியேறும். அதுமட்டுமின்றி, இந்நிகழ்ச்சியின் அனைத்து அத்தியாயங்களையும் ஆன் டிமாண்ட் சேவையிலும் கண்டு மகிழலாம்.
இந்நிகழ்ச்சியில் தயாரிக்கப்படும் உணவுகளை செய்யும் முறைகளை www.astroulagam.com.my/AnbinOli அகப்பக்கத்தில் பெற்று கொள்ளலாம்.