Home கருத்தாய்வு அன்வார் மீண்டும் பெர்மாத்தாங் பாவ்வை தேர்ந்தெடுத்தது ஏன்?

அன்வார் மீண்டும் பெர்மாத்தாங் பாவ்வை தேர்ந்தெடுத்தது ஏன்?

610
0
SHARE
Ad

Datuk Seri Anwar Ibrahimஏப்ரல் 6 – அன்வார் பேராக் மாநிலத்தில் போட்டியிடுவது தொர்பாக கடந்த சில நாட்களாக அரசியல் வட்டாரங்களில் நிலவி வந்த சலசலப்பு நேற்று இரவோடு அடங்கியுள்ளது. தனது சொந்த தொகுதியான பெர்மாத்தாங் பாவிலேயே மீண்டும் போட்டியிடப்போவதாக அன்வார் அறிவித்துள்ளார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் தான் பேராக் மாநிலத்தில் போட்டியிடப்போவதாக, கடந்த புதன்கிழமை அன்வார் அறிவித்ததைத் தொடர்ந்து, அவர் 1982 ஆம் ஆண்டு அம்னோவில் இணைந்தது முதல் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வரும் பெர்மத்தாங் பாவ்வை விட்டு வேறு தொகுதிக்கு மாறுவது ஏன் என்று அனைத்து தரப்பிலும் கேள்விகள் எழுந்தன.

பெர்மத்தாங் பாவ் தொகுதி மக்களும் அன்வார் தொகுதி மாறுவது குறித்த முடிவுக்கு தங்கள் வருத்தத்தையே தெரிவித்திருந்தனர்.

#TamilSchoolmychoice

ஆனால் அவற்றையும் மீறி அன்வார் பேராக் மாநிலத்தில் தம்பூன் தொகுதியில் போட்டியிடுவது என்று நேற்று வரை உறுதியாக இருந்தார்.

அன்வார் பேராக் மாநிலத்தை நோக்கி நகர்வதற்கான காரணத்தை விளக்கி கருத்தாய்வு ஒன்றை நேற்று செல்லியல்.காமில் “அன்வார் பேராக்கில் போட்டியிடுவது ஏன்? ” என்ற தலைப்பில் வெளியிட்டிருந்தோம்.

இந்நிலையில், மக்கள் கூட்டணியைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் அன்வாரிடம் சில யோசனைகளை தெரிவித்ததைத் தொடர்ந்து, தான் போட்டியிடப்போவது பெர்மத்தாங் பாவ்வா அல்லது பேராக் மாநிலம் தம்பூன் தொகுதியா என்று முடிவு எடுக்க வேண்டிய நெருக்கடியான சூழ்நிலைக்கு அன்வார் தள்ளப்பட்டார்.

இறுதியாக நேற்று இரவு, தாமான் பாவ் ஜெயாவில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அன்வார், தனக்கு இத்தனை வருடங்களாக ஆதரவு அளித்து வரும் பெர்மாத்தாங் பாவ் தொகுதி மக்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக தான் மீண்டும் அத்தொகுதியிலேயே போட்டியிடப்போவதாக அறிவித்தார்.

அன்வாரின் இந்த திடீர் திருப்பத்தில் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றும் இல்லை. காரணம் தற்போதைய அரசியல் சூழலில், கடுமையான போட்டி நிலவும் பேராக் மாநிலத்தை நோக்கி அன்வார் செல்வது மக்கள் கூட்டணிக்கு அந்த அளவிற்கு ஆரோக்கியமானதாக இருக்காது.

அன்வார் மீண்டும் பெர்மாத்தாங் பாவ்வை தேர்ந்தெடுத்தது ஏன்?

கடந்த 2008 ஆண்டு பொதுத் தேர்தலில் தேசிய முன்னணியின் வசம் சென்ற பேராக் மாநிலத்தை மீண்டும் கைப்பற்றி மக்களின் ஆதரவு எங்கள் பக்கம் தான் என்பதை நிரூபித்துக் காட்ட ஒரு பலமான தலைமைத்துவத்தை உருவாக்கும் ஒரே நோக்கத்தோடு தான் அன்வார் பேராக் மாநிலத்தை நோக்கி நகர திட்டமிட்டார்.

ஆனால் பேராக் மாநிலம் தம்பூன் தொகுதியில்  அன்வார் போட்டியிட்டு வெல்ல வேண்டுமானால், மிக கடுமையாக உழைக்க வேண்டும். மேலும் மக்கள் கூட்டணியின் சார்பாக போட்டியிடும் மற்ற தொகுதிகளைச் சேர்ந்த வேட்பாளர்களுக்கு ஆதவாக  பிரச்சாரங்களில் அன்வாரால் ஈடுபடமுடியாது.

அத்துடன் தான் போட்டியிடப்போகும் தொகுதியான தம்பூனிலேயே அன்வார் தனது முழு கவனத்தையும் செலுத்த வேண்டிய கட்டாயம் வரும்.இதனால் அன்வார் தம்பூன் என்ற சிறிய வட்டத்திற்குள் சிக்கிக் கொள்ளும் சூழ்நிலை உருவாகிவிடும்.

மேலும், மத்தியில் ஆட்சி அமைக்கும் கனவோடு களமிறங்கும் மக்கள் கூட்டணிக்கு, ஒருவேளை அன்வார் தம்பூன் தொகுதியில் தோல்வியடைந்தால் அது மிகப் பெரிய பின்னடைவாக அமைந்துவிடும்.

இதையெல்லாம், தவிர்க்கும் பொருட்டு தான், அன்வார் தனது சொந்த தொகுதியான பெர்மாத்தாங் பாவ்வில் மீண்டும் போட்டியிடுவதென முடிவெடுத்துள்ளார். அன்வாரின் இந்த முடிவு மக்கள் கூட்டணிக்கு சாதகமான சுழ்நிலையையே ஏற்படுத்தப்போகிறது.

காரணம், பெர்மாத்தாங் பாவ் தொகுதி மக்களுக்கு நன்கு பரீட்சயமான தலைவரான அன்வார் அந்த தொகுதியில் அதிகமான பிரச்சார வேலைகளில் ஈடுபடத்தேவையில்லை. அதேநேரத்தில் தம்பூன் தொகுதிக்கு இடம் மாறி, தனது சொந்த தொகுதி மக்களின் கோபத்தையும் சம்பாதிக்கும் நிலை அன்வாருக்கு வரப்போவதில்லை.

எனவே, அன்வார் இனி சுதந்திரமாக மக்கள் கூட்டணியின் சார்பான  அனைத்து தேர்தல் பிரச்சாரங்களிலும் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் கடுமையான போட்டி நிலவும் மற்ற தொகுதிகளில், அன்வார் தனது கவனத்தை செலுத்தி மக்கள் கூட்டணிக்கு அதிகமான வாக்குகளை பெற்றுத் தந்து, மேலும் பல தொகுதிகளை வெல்லும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.

 – பீனிக்ஸ்தாசன்