Home One Line P2 உலகின் மிக நீண்ட தூர இடைநில்லா விமானப் பயணம் வெற்றிகரமாக நிறைவேறியது

உலகின் மிக நீண்ட தூர இடைநில்லா விமானப் பயணம் வெற்றிகரமாக நிறைவேறியது

1395
0
SHARE
Ad

சிட்னி –  ஆஸ்திரேலியாவின் குவாந்தாஸ் விமான நிறுவனம் உலகின் மிக நீண்ட தூர – வணிக ரீதியான – இடைநில்லா விமானப் பயணத்தை இன்று ஞாயிற்றுக்கிழமை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது.

நியூயார்க்கிலிருந்து சிட்னி வரையிலான இந்தப் பயணம் மொத்தம் 19 மணி நேரம் 16 நிமிடங்கள் நீடித்தது.

பரிசோதனை முயற்சியாக நடத்தப்பட்ட இந்த விமானப் பயணத்திற்கு போயிங் 787-9 இரக விமானம் பயன்படுத்தப்பட்டது. அந்த விமானத்தில் 49 பயணிகள் பயணம் செய்தனர்.

#TamilSchoolmychoice

16,200 கிலோ மீட்டர் தூரத்தை இந்த விமானப் பயணம் கடந்தது.

அடுத்த மாதம் மற்றொரு பரிசோதனை முயற்சியாக இலண்டனிலிருந்து சிட்னி வரையிலான இடைநில்லாப் பயணத்தை குவாந்தாஸ் மேற்கொள்ளவிருக்கிறது.

எரிபொருள் நிரப்புவதற்குக் கூட எங்கும் நிற்காமல் நீண்ட தூர விமானப் பயணத்தை மேற்கொள்ளும் முயற்சிகளை குவாந்தாஸ் தொடர்ந்து நடத்தி வரும். இந்தத் திட்டம் வெற்றியடைந்தால் ஆண்டின் இறுதிக்குள் இவ்வாறான புதிய விமானப் பயண அட்டவணைகளை அந்நிறுவனம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2022, அல்லது 2023-ஆம் ஆண்டுகளில் இத்தகைய நீண்ட தூர இடைநில்லா விமானப் பயணங்கள் முழு அளவில் செயல்படுத்தப்படும்.

நியூயார்க்-சிட்னி இடையிலான இந்தப் பயணத்தின்போது, பல்வேறு பரிசோதனைகள் விமானி மீதும், பயணிகள் மீதும் நடத்தப்பட்டன. விமானியின் மூளை செயல்பாடு, பயணிகளின் உடல்நிலை மாற்றம் போன்ற அம்சங்கள் அளவிடப்பட்டு கணிக்கப்பட்டன. பயணிகளுக்கான உணவுகள் வழங்கப்பட்ட பின்னர் அவர்கள் உறங்குவதற்கு கட்டாயப்படுத்தப்பட்டனர்.

இந்தப் பயணத்தின் மூலம் பெற்ற அனுபவங்கள், புள்ளிவிவரங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு அடுத்தடுத்த நீண்ட தூர விமானப் பயணங்களை குவாந்தாஸ் வடிவமைக்கும்.