கோத்தா கினபாலு: அழியும் தருவாயில் இருக்கும் மற்றொரு பிக்மி யானை சபாவில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக டி ஸ்டார் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த யானையின் தந்தங்களும் அகற்றப்பட்டுள்ளதாக அது தெரிவித்துள்ளது. சபாவின் பெலூரானில் உள்ள ஒரு பண்ணையில் இந்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அவ்வகை யானையின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதை சபா வனவிலங்கு துறை இயக்குநர் அகஸ்டின் துகா உறுதிப்படுத்தினார்.
“எங்கள் கால்நடை மருத்துவர்கள் மற்றும் வன அதிகாரிகள் விசாரணைக்குச் சென்றுள்ளனர். அச்சடலம் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் மாலையில் பிரேத பரிசோதனை செய்தனர். யானை சுட்டுக் கொல்லப்பட்டு, அதன் இரண்டு தந்தங்கள் அகற்றப்பட்டுள்ளன,” என்று அவர் கூறினார்.
கடந்த மாதம், தாவாவில் 70 துப்பாக்கிச்சூட்டுக்காயங்களுடன்பிக்மி யானை இறந்து கிடந்தது குறிப்பிடத்தக்கது. சட்ட விரோத வேட்டையாளர்களால் அதன் தந்தங்கள் அகற்றப்பட்டிருக்கும் என்று சந்தேகிக்கப்படுகிறது.