கோலாலம்பூர்: கெராக்கான் தலைவர் ஜேசன் லூ மற்றும் இரண்டு சீன மொழி செய்தித்தாள்களுக்கு எதிராக ஜசெக பொதுச் செயலாளர் லிம் குவான் எங் அளித்த அவதூறு வழக்கை பினாங்கு உயர் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது.
பினாங்கு முன்னாள் முதலமைச்சரான லிம், அவர்களுக்கு 150,000 ரிங்கிட் செலுத்தவும் உத்தரவிடப்பட்டது.
2017-ஆம் ஆண்டில் பீல் அவென்யூவில் உள்ள மாநில அரசு நிலங்களை ஒரு தனியார் மருத்துவமனைக்கு விற்றது குறித்து கேள்வி எழுப்பிய லூ, மற்றும் இரண்டு செய்திதாள்களான சீனா பிரஸ் பெர்ஹாட் மற்றும் குவாங் மிங் ரிபாவோ செண்டெரியான் பெர்ஹாட் ஆகியோருக்கு எதிராக லிம் அவதூறு வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.
அவதூறாகக் கருதப்பட்ட கட்டுரை லிமுக்கு வாய்மொழியாக மொழிபெயர்க்கப்படவில்லை என்று ஒரு மொழிபெயர்ப்பாளர் ஒப்புக் கொண்டதை அடுத்து, நீதிபதி ரோசிலா யோப் அவதூறு வழக்கை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார்.
“நீதிமன்றத்தில் உள்ள அனைத்து மொழிபெயர்ப்புகளிலும் தேசிய மொழி பயன்படுத்தப்பட வேண்டும்” என்று ரோசிலா கூறினார்.
“சாட்சிகள் உரையை மொழிபெயர்ப்பதில் தங்கள் சொந்த சொற்களைப் பயன்படுத்துவதை ஒப்புக் கொண்டுள்ளனர், இது வெவ்வேறு மூலங்களிலிருந்து எடுக்கப்பட்டது. இந்த காரணிகளின் வெளிச்சத்தில், அரசு தரப்பு வழக்கு குறைபாடுடையது என்பதை நான் காண்கிறேன்,” என்று அவர் கூறினார்.