கோலாலம்பூர்: தாம் பிரதமராகும் போது 1948-ஆம் ஆண்டு தேசத் நிந்தனைச் சட்டத்தை இரத்து செய்வதற்கான உறுதிப்பாட்டை பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் அறிவித்துள்ளார்.
இருப்பினும், அவர் அதற்கான சவால்களை எதிர்கொள்ளக்கூடும் என்றும் தெரிவித்தார்.
“இது நானும் கட்சியும் செய்த ஓர் உறுதிப்பாடாகும். பொதுத் தேர்தலுக்கு முன்னர் நம்பிக்கைக் கூட்டணியின் தேர்தல் வாக்குறுதியில் இது தெளிவாகக் கூறப்பட்டுள்ளது ஆனால், அதனை எடுத்துக் கூறும் விதத்தில் ஒரு பிரச்சனை உள்ளது. மலாய்க்காரர்கள் இருப்பு, மலாய் மொழி, அல்லது மலாய் ஆட்சியாளர்களின் அம்சத்தை அச்சுறுத்தும் நிலை ஏற்படும் என்ற அச்சம் உள்ளன. நான் இவற்றை நம்பவில்லை, ஏனென்றால் அவதூறு மற்றும் தேசத் துரோகத்தை சமாளிக்க நமக்கு போதுமான சட்டங்கள் உள்ளன.” என்று அவர் கூறினார்
“எனவே தங்கள் கருத்துக்களைக் கூற விரும்பும் மக்களுக்கு எதிராக கொடூரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய அவசியமில்லை” என்று அவர் துருக்கிய ஊடகமான டிஆர்டி வேர்ல்டுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.
கடந்த 14-வது பொதுத் தேர்தலின் போது, சட்டத்தின் சில கொடுங்கோன்மைகளை இரத்து செய்வதாகவும், மேலும் பல கொடுங்கோன்மைக்கான விதிகளை இரத்து செய்வதாகவும் நம்பிக்கைக் கூட்டணி உறுதியளித்திருந்தது.