சென்னை: ஆழ்துளைக் கிணறுகள் மற்றும் சுரங்கப்பாதைகளில் இருந்து குழந்தைகளை மீட்பதற்கான கருவிகளின் செயல்பாட்டு முன்மாதிரி ஒன்றை உருவாக்குவதற்காக தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை ஹேக்கத்தான் (#hackathon) எனும் போட்டியினை முன்மொழிந்துள்ளது.
நிகழ்நேர சிக்கல்களைத் தீர்க்க தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் இந்த போட்டி குறித்த தகவலை தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
திருச்சி மாவட்டம் நடுக்காப்பட்டியில் கைவிடப்பட்ட ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த இரண்டரை வயது குழந்தை பி.சுஜித் வில்சன் இறந்ததை அடுத்து இந்தத் திட்டம் முன் மொழியப்பட்டுள்ளது.
சிறுவனை மீட்பதற்கான அனைத்து முயற்சிகளும் வீணாகின. மீட்பு நிறுவனங்களுடன் அதிநவீன உபகரணங்கள் இல்லாதது மக்களிடத்திலிருந்து அதிகமான எதிர்மறை விமர்சனங்களைக் கண்டது.
குழந்தைகளை ஆழ்துளைக் கிணறுகளிலிருந்து மீட்பதற்கான தீர்வுக்கு ஊக்கத்தொகை மற்றும் சாதனங்களை சந்தைப்படுத்த ஆதரவு வழங்கப்படும் என்று தொழில்நுட்ப செயலாளர் சந்தோஷ் பாபு கடந்த செவ்வாயன்று தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.
“சுஜித்தின் மரணம் கடைசியாக இருக்கட்டும். இதுபோன்ற நிகழ்வுகள் மீண்டும் நடக்கக்கூடாது. ஹேக்கத்தான் மூலம், தனிநபர்கள் மற்றும் தொடக்க நிறுவனங்கள் குழந்தைகளை ஆழ்துளைகளிலிருந்து மீட்பதற்கு நடைமுறை தீர்வுகளை கொண்டு வர முடியும்,” என்று பாபு டைம்ஸ் அப் இந்தியாவிடம் கூறினார்.
மாதிரி சாதனங்களை வைத்திருக்கும் கண்டுபிடிப்பாளர்கள் தகவல் தொழில்நுட்பத் துறையை அணுகி, நிபுணர் குழுவின் முன் தங்கள் கருவிகளை நிரூபிக்க இது ஒரு வாய்ப்பாக அமைய உள்ளது.