புதுடெல்லி, ஏப்.6- ஏர்-இந்தியா நிறுவனத்தை தனியார் மயமாக்க வேண்டும் என்று மத்திய கனரக தொழில்கள் துறை அமைச்சர் பிரபுல் படேல் கூறியுள்ளார்.
புதுடெல்லியில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசிய பிரபுல் படேல் கூறியதாவது: இப்போதைக்கு, தொழிலாளர் சட்டங்களை திருத்த வேண்டிய தேவையில்லை என, நினைக்கிறேன். ஏனெனில், தேவையான சீர்திருத்தங்கள் குறித்து, தெளிவான அம்சங்கள் எதுவும் காணப்படவில்லை.
கடந்த 10 ஆண்டுகளில் தொழிலாளர் – முதலாளி உறவில் சிறப்பான முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது. தனக்கு கிடைக்கும் லாபத்தில் ஒரு பங்கை தொழிலாளர்களுக்கு விட்டுக் கொடுக்க முதலாளிகள் இப்போது தயங்குவதே கிடையாது. இது ஆரோக்கியமான அம்சம். தொழில் நிறுவனங்களில் அதிக அளவில் வேலை நிறுத்தங்களும் நடப்பதில்லை. வங்கித் துறையினர் மட்டும், ஆண்டுக்கு ஒரு முறையோ, இரு முறையோ போராட்டங்களில் ஈடுபடுகின்றனர். பொதுவாக வேலை நிறுத்தம் எதுவுமற்ற சுமுகமான நிலையே இந்திய தொழில் துறையில் நிலவுகிறது.
வாகன உற்பத்தியாளர்கள் மட்டும் தொழிலாளர் சட்டங்களில் மாற்றம் செய்ய வேண்டும் எனக் கோரி வருகின்றனர். நம் நாட்டில் இன்னும் 100 ஆண்டுகளுக்கு தேவையான நிலக்கரி இருப்பு உள்ளது. எனினும், நிலக்கரிக்காக இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்காவுக்கு செல்கிறோம். இந்நிலை மாறவேண்டும்.
என் தனிப்பட்ட கருத்தின் படி ஏர் – இந்தியா நிறுவனம் தனியார் மயமாக்கப் பட வேண்டும். எந்தவொரு சேவை நிறுவனமும் பொதுத் துறை நிறுவனமாக இருந்தால் சிறப்பாக சேவை வழங்க முடியாது என்பதே என் எண்ணம். சேவை துறையில், தனியார் தான் சிறப்பாக செயலாற்றி வருகின்றனர் என்று அமைச்சர் பிரபுல் படேல் கூறினார்.