மும்பை, ஏப்.6- மும்பை தொழிலதிபர்களும், சகோதரர்களுமான அனில் அம்பானி மற்றும் முகேஷ் அம்பானி, நீண்ட ஆண்டு பிரிவினைக்குப் பிறகு முதல் முறையாக இணைகிறார்கள்.
4ஜி தொலைத்தொடர்பு சேவை வர்த்தகத்திற்காக இணைந்துள்ள இவர்கள் இருவருக்கும் இடையே ரூ.1200 கோடிக்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
தொழிலதிபர் திருபாய் அம்பானியின் மறைவுக்குப் பின்னர் அவரது மகன்கள் முகேஷ் அம்பானி, அனில் அம்பானி ஆகியோர் 2005-ம் ஆண்டு சொத்துகளைப் பிரித்து கொண்டு பிரிந்தனர்.
முகேஷ் அம்பானி பெட்ரோ கெமிக்கல்ஸ், எண்ணெய் சுத்திகரிப்பு, எரிவாயு உள்ளிட்ட தொழிலில் ஈடுபட்டு வருகிறார். அனில் அம்பானி மின்சாரம், நிதிச் சேவை மற்றும் தொலைத் தொடர்பு தொழிலில் ஈடுபட்டுள்ளார். தற்போது இருவரும் 4 ஜி தொலைத் தொடர்பு சேவைக்கான வர்த்தகத்தில் இணைந்துள்ளனர்.
முகேஷ் அம்பானிக்கு சொந்தமான இன்ஃபோடெல் பிராட்பேண்ட் என்ற நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் லிமிடெட் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்நிறுவனம் 4-ஜி சேவை அளிக்க அண்மையில் மத்திய அரசு அனுமதி அளித்தது.
ஏற்கெனவே நாடு முழுவதும் 22 சேவை பகுதிகளில் 4-ஜி சேவை அளிப்பதற்காக அனில் அம்பானி நிறுவனம் சுமார் 1,20,000 கி.மீ. தூரத்துக்கு கண்ணாடியிழை கேபிள் (ஆப்டிக் பைபர்) பதித்துள்ளது. தற்போது 4 ஜி சேவைக்கான அனுமதி பெற்றிருக்கும் முகேஷ் அம்பானியின் நிறுவனம், அனில் அம்பானியின் கண்ணாடியிழை கேபிள் மூலம் தமது சேவையை வழங்க முடிவு செய்திருக்கிறது.
இதற்காக ரூ. 1,200 கோடியை அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்துக்கு முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் லிமிடெட் வழங்கும்.
மேலும் எதிர்காலத்தில் ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் அளிக்க உள்ள வாய்ஸ் சேவைக்காக அனில் அம்பானியின் நிறுவனத்தின் 20 ஆயிரம் தொலைத் தொடர்பு டவர்களையும் பயன்படுத்திக் கொள்ளவும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
கடந்த 14 காலாண்டுகளில் 13 காலாண்டுகளில் நஷ்டத்தை சந்தித்து வந்துள்ள அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் பங்குகள், இந்த புதிய ஒப்பந்தத்தால் நேற்று 17.08 சதவீதம் விலை உயர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.