Home வணிகம்/தொழில் நுட்பம் அம்பானியை முந்துவாரா ஆசியாவின் 2-வது பணக்காரர் கௌதம் அடானி?

அம்பானியை முந்துவாரா ஆசியாவின் 2-வது பணக்காரர் கௌதம் அடானி?

798
0
SHARE
Ad

(இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரர் முகேஷ் அம்பானி. ஆசியாவிலும் பெரிய பணக்காரர் இவர்தான். இவரை அடுத்து இரண்டாவது பெரிய பணக்காரராக இந்தியாவிலும், ஆசியா அளவிலும் உருவெடுத்திருக்கிறார் கௌதம் அடானி. இருவருக்கும் இடையிலான சொத்துகளின் மதிப்பு வித்தியாசம் சுமார் 9 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மட்டுமே! யார் இந்த அடானி, அவரின் பின்னணி என்ன? அடுத்துவரும் ஆண்டுகளில் அம்பானியை முந்துவாரா புதிதாக முளைத்திருக்கும் அடானி? விவரிக்கிறார் செல்லியல் இணைய ஊடகத்தின் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன்)

உலகப் பணக்காரர்களை அவர்களின் சொத்து மதிப்புகளுக்கு ஏற்ப வரிசைப்படுத்தி வெளியிடும் வணிக ஊடகம் புளும்பெர்க்.

அண்மையில் புளும்பெர்க், ஆசியாவின் பெரும் பணக்காரர்களின் பட்டியலை வெளியிட்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

அந்தப் பட்டியலில் முதலாவது, இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கும் இரண்டு பணக்காரர்களுமே இந்தியர்கள்.

புளும்பெர்க்கின் புதிய பட்டியலில் ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரராக முகேஷ் அம்பானி தனது முதலிடத்தைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டுள்ளார்.

இந்தியாவின் கௌதம் அடானி ஆசியாவின் இரண்டாவது நிலையில் மிகப் பெரிய பணக்காரராக உருவெடுத்துள்ளார்.

இருவருமே இந்தியாவின் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது இன்னொரு சுவாரசியத் தகவல்.

திடீரென வணிக உலகில் முன்னணிக்கு வந்திருக்கும் அடானி என்பவர் யார்? அவரின் பின்னணி என்ன?

ஆசியாவின் முதல் பணக்காரரான அம்பானியின் சொத்து மதிப்பு 76 பில்லியன் அமெரிக்க டாலர்களாக மதிப்பிடப்பட்டிருக்கிறது. இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கும் கௌதம் அடானியின் மதிப்பு 67.6 பில்லியன் டாலர்களாக மதிப்பிடப்பட்டிருக்கிறது.

அம்பானி உலக அளவில் பணக்காரர்கள் வரிசையில் 13-வது இடத்தைப் பிடித்திருக்கிறார்.

கௌதம் அடானி உலக அளவில் 14-வது பணக்காரராக பெயர் குறிப்பிடப்பட்டிருக்கிறார்.

கடந்த ஓராண்டில் மட்டும் அடானியின் சொத்து மதிப்பு 34 பில்லியன் டாலருக்கு உயர்ந்திருக்கிறது.

ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானிக்கும் இரண்டாவது பணக்காரரான அடானிக்கும் இடையில் இருக்கும் வித்தியாசம் சுமார் 9 பில்லியன் அமெரிக்க டாலர்கள்தான்.

எனவே, தொடர்ந்து தனது தொழில்களை விரிவாக்கி வரும் அடானி, கூடிய விரைவில் அம்பானியைப் பின்னுக்குத் தள்ளி முதலிடத்தை இந்திய அளவிலும், ஏன் ஆசிய அளவிலும் கூட பிடித்து விடுவார் என இந்திய வணிக ஊடகங்கள் கணிக்கின்றன.

அடானியின் பின்னணி என்ன?

கௌதம் அடானி

கௌதம் சாந்திலால் அடானி என்ற பெயர் கொண்ட இவர், குஜராத்தின் ஜைன் (Jain)  சமூகத்தில் 1962-இல் பிறந்தவர். இப்போது அவருக்கு வயது 59-தான்.

பொதுவாக குஜராத் சமூகத்தினர் வணிகத்தில் தீவிரமாக ஈடுபடுபவர்கள். உலகம் எங்கும் பல நாடுகளில் புலம் பெயர்ந்த இந்தியர்களில் வணிகத்துறையில் முன்னணி வகிப்பவர்கள் குஜராத் சமூகத்தினர்தான்.

மலேசியாவிலும் குஜராத் சமூக வணிகத்தினர் பலர் வணிகத் துறையில் ஈடுபட்டு பணக்காரர்களாக இருக்கிறார்கள். குறிப்பாக துணிவகைகள், ஆடைகள் தயாரிப்பு விநியோகம் தொழிலில் இவர்கள் மிக அதிகமாக ஈடுபட்டிருக்கிறார்கள்.

குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகர்தான் அடானியின் பூர்வீகம். ஷாந்திலால் அடானி, ஷாந்தி அடானி தம்பதியருக்கு பிறந்தவர். உடன் பிறந்தவர்கள் 7 சகோதர, சகோதரிகள்.

அடானியின் தந்தையாரும் துணிகள், ஆடைகள் தொடர்பான வணிகத்தில் ஈடுபட்டிருந்தார்.

பல உலகப் பணக்காரர்களைப் போன்று அடானியும் பல்கலைக் கழகப் பட்டப்படிப்பை பாதியிலேயே நிறுத்திக் கொண்டு வெளியேறியவர்.

அகமதாபாத்தில் பள்ளிப் படிப்பை முடித்த அடானி, பின்னர் குஜராத் பல்கலைக் கழகத்தில் வர்த்தகத் துறைப் பட்டப் படிப்புக்காக சேர்ந்தார். ஆனால், இரண்டாவது ஆண்டிலேயே பட்டப் படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டு வெளியேறி விட்டார்.

1978-ஆம் ஆண்டில் மும்பைக்கு சென்று வைரம் தரம் பிரிக்கும் வேலையில் சேர்ந்தார். பின்னர் வைரங்களை வாங்கி விற்கும் சொந்த நிறுவனத்தை தோற்றுவித்தார்.

பிளாஸ்டிக் எனப்படும் நெகிழிப் பொருட்களின் ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் 1981-ஆம் ஆண்டில் ஈடுபட்டார். இதன் மூலம் அவருக்கு உலகளாவிய வணிகம் குறித்த புரிதல் ஏற்பட்டது.

1988-ஆம் ஆண்டில் “அடானி குழுமம்” நிறுவனங்களை நிறுவி வணிகத்தை விரிவாக்கினார்.

பல தொழில்களில் ஈடுபட்டாலும் அடானிக்கு ஏனோ தந்தையாரின் ஆடைத் தயாரிப்பு தொழிலில் ஆர்வம் ஏற்படவில்லை.

மாறாக, போக்குவரத்து, எரிசக்தி, விவசாயம், தற்காப்புத் துறை, வான்வெளி என மாறுபட்ட வணிகங்களில் ஈடுபட்டு தொழில்களை விரிவாக்கினார்.

கட்டமைப்புகள், துறைமுகங்கள் மேம்பாடு, எரிசக்தி உற்பத்தி, போன்ற நவீனத் தொழில்களில் தற்போது ஆதிக்கம் செலுத்துகிறார் அடானி.

தனியார் மயமாக்கப்பட்ட துறைமுகத்தை நிர்வகிக்கும் அடானி

1994-ஆம் ஆண்டில் குஜராத் மாநிலத்தின் மந்த்ரா துறைமுகத்தைத் தனியார் மயமாக நிர்வகிக்கும் குத்தகையைப் பெற்றார் அடானி. அதைத் தொடர்ந்து துறைமுக நிர்வாகத் தொழிலில் அதிகமாக ஈடுபட்டார் அடானி.

இன்று இந்தியாவிலேயே மிகப் பெரிய தனியார் துறைமுகத்தை நிர்வகிக்கும் நிறுவனமாக அடானியின் நிறுவனம் திகழ்கிறது.

அவரின் மந்த்ரா துறைமுகம் இந்தியாவிலேயே மிகப் பெரிய தனியார்மய துறைமுகமாகும்.

பின்னர் மின்சக்தி உற்பத்தி தொழிலிலும் ஈடுபட்டார். அவரின் மின்சக்தி உற்பத்தி நிறுவனம்தான் இந்தியாவிலேயே மிகப் பெரிய தனியார்மய மின்சக்தி உற்பத்தி நிறுவனமாக இன்றைக்குத் திகழ்கிறது.

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாண்ட் மாநிலத்தில் நிலக்கரி சுரங்கங்களையும் அடானி கொண்டிருக்கிறார்.

சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கும் தொழிலிலும் ஆர்வம் காட்டிய அடானி இந்தியாவின் மிகப் பெரிய சூரிய சக்திக் குத்தகையை கடந்த 2020-ஆம் ஆண்டு இந்திய அரசாங்கத்திடம் இருந்து பெற்றார். இதன் மதிப்பு 6 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும்.

அடானியின் வளர்ச்சிக்குப் பின்னணியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி முக்கியக் காரணம் என பலமுறை இந்திய ஊடகங்கள் தெரிவித்திருக்கின்றன.

ஒருமுறை இந்தியாவின் சக்தி வாய்ந்த மனிதர்கள் பட்டியலை இந்தியா டுடே ஊடகம் வெளியிட்டபோது அதில் 3-வது இடத்தைப் பிடித்தவர் அடானி.

உலகின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவராக வளர்ந்து வரும் வேளையில், அறப்பணிகளுக்கும் ஏராளமாக வழங்கி வருகிறார் அடானி.

அவரின் அடானி அறவாரியத்தை அவரின் மனைவி பிரித்தி அடானி நிர்வகிக்கிறார்.

கொவிட்-19 பாதிப்புகள் தொடங்கியபோது இந்தியப் பிரதமரின் சிறப்பு நிதிக்கு ஒரு பில்லியன் (ஆயிரம் மில்லியன்) ரூபாய் அன்பளிப்பாக வழங்கினார் அடானி. குஜராத் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 50 மில்லியன் ரூபாய் வழங்கினார். மகராஷ்டிரா மாநில முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 10 மில்லியன் ரூபாய் வழங்கினார்.

இந்தியாவில் தற்போது ஏற்பட்டிருக்கும் ஆக்சிஜன் உயிர்வளி பற்றாக்குறையை சமாளிக்க வெளிநாடுகளில் இருந்து அவற்றை வரவழைத்து இலவசமாக வழங்கி வருகிறார் அடானி.

நாள் ஒன்றுக்கு 1,500 உயிர்வளி கொள்கலன்களை குஜராத் மாநிலத்தில் தேவைப்படும் பகுதிகளுக்கு அடானியின் அறப்பணி நிறுவனம் அனுப்பி வருகிறது.

அடானியின் வாழ்க்கையில் மறக்க முடியாத சில திருப்பங்களும் நிகழ்ந்திருக்கின்றன. 1998-இல் அவர் பிணைப் பணத்திற்காக கடத்தப்பட்டார். ஆனால் பிணைப் பணம் வழங்கப்படாமலேயே ஏனோ விடுதலை செய்யப்பட்டார்.

2008-ஆம் ஆண்டில் மும்பை தாஜ் சொகுசு தங்கும் விடுதியில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டபோது அடானி அந்த இடத்தில் இருந்தார். ஆனால் அதிர்ஷ்டவசமாக அவருக்கு அசம்பாவிதம் ஏதும் நிகழவில்லை.

அடுத்து வரும் ஆண்டுகளில் அம்பானியைப் போலவே, கௌதம் அடானியும் வணிகத் துறையில் இந்தியாவிலும், உலக அளவிலும் முக்கிய இடத்தைப் பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

-இரா.முத்தரசன்