Home வணிகம்/தொழில் நுட்பம் “பிக் பசார்” பேரங்காடிக் கடைகளுக்கு மோதிக் கொள்ளும் அமேசோனும் அம்பானியும்!

“பிக் பசார்” பேரங்காடிக் கடைகளுக்கு மோதிக் கொள்ளும் அமேசோனும் அம்பானியும்!

744
0
SHARE
Ad

புதுடில்லி : உலகின் முன்னணி இணையவழி வணிக நிறுவனம் அமேசோன். இதன் இணைய வணிகத்தில் மூன்றில் ஒரு பகுதி இந்தியாவில்தான் மேற்கொள்ளப்படுகிறது.

இந்தியாவில் மேலும் ஆழமாகவும், விரிவாகவும் காலூன்ற எண்ணிய அமேசோன் இரண்டு வருடங்களுக்கு முன்னர் 200 மில்லியன் டாலர் முன்பணத்தைச் செலுத்தி பியூச்சர் குரூப் (Future Group) என்ற நிறுவனத்தை வாங்க முற்பட்டது.

‘பிக் பசார்’ (Big Bazaar) என்ற பெயரில் இயங்கும் பலதரப்பட்ட மளிகை சாமான்களை விற்பனை செய்யும் பேரங்காடிக் கடைகளுக்கு உரிமை பெற்ற நிறுவனம்தான் பியூச்சர் குரூப்.

#TamilSchoolmychoice

இந்தியாவின் 400 நகரங்களில் சுமார் 1,500 பிக் பசார் விற்பனை மையங்களை பியூச்சர் குரூப் கொண்டுள்ளது. இதனைக் கையகப்படுத்துவதன் மூலம் தனது இணைய வழி வணிகத்தை விரிவாக்க அமேசோன் திட்டமிட்டது.

ஆனால், அமேசோனின் நுழைவைத் தடுக்க முற்பட்ட முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம், உள்ளே நுழைந்து பியூச்சர் குரூப் நிறுவனத்தின் மொத்த சொத்துடமைகளையும் 3.4 பில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்க ஒப்பந்தம் போட்டது.

இதைத் தொடர்ந்து ரிலையன்ஸ் நிறுவனத்தின் அந்த ஒப்பந்தத்தை நிறுத்தி வைக்க இந்திய உச்ச நீதிமன்றத்தில் அமேசோன் வழக்கு தொடுத்துள்ளது.

ரிலையன்ஸ், அமேசோன் என்ற இரு பிரம்மாண்ட நிறுவனங்களுக்கிடையிலான மோதல் தற்போது சிங்கப்பூரில் ஆர்பிட்ரேஷன் எனப்படும் நடுநிலை அமைப்பு மூலமான சமரச உடன்பாட்டுக்கான பேச்சுவார்த்தையில் இருக்கிறது.

அந்தப் பேச்சு வார்த்தை முடிவடையும்வரை ரிலையன்ஸ் பியூச்சர் குரூப் சொத்துகளை வாங்கும் ஒப்பந்தத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என அமேசோன் உச்ச நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டுள்ளது.

எதிர்வரும் 2024-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் இணைய வழி வணிகத்தின் மதிப்பு 85.3 பில்லியன் அமெரிக்க டாலராக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் அமேசோனைத் தொடர்ந்து வால்மார்ட் போன்ற பேரங்காடி நிறுவனங்களும் பெரிய அளவில் இந்தியாவில் வணிகத்தில் ஈடுபட முனைப்புடன் ஈடுபட்டு வருகின்றன.