Home கலை உலகம் தி பேமிலி மேன் 2 : இந்தி மொழியில் மட்டும் வெளியானது

தி பேமிலி மேன் 2 : இந்தி மொழியில் மட்டும் வெளியானது

921
0
SHARE
Ad

புதுடில்லி : அமேசோன் பிரைம் கட்டண வலைத் திரையில் இன்று வெள்ளிக்கிழமை (எதிர்வரும் ஜூன் 4-ஆம் தேதி)  “தி பேமிலி மேன் -2” தொடரின் இரண்டாவது பருவத்திற்கான (சீசன் 2) ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி வெளியீடு கண்டது.

மொத்தம் 9 தொடர்களைக் கொண்ட “தி பேமிலி மேன் -2” முழுக்க முழுக்க இந்தியில் மட்டும் வெளியிடப்பட்டிருக்கிறது. “தி பேமிலி மேன்” தொடரின் முதல் பருவம் (சீசன்) தமிழ் உள்ளிட்ட சில இந்திய மொழிகளில் வெளியானது.

ஆனால் இந்த முறை இந்தியில் மட்டும் வெளியிடப்பட்டிருக்கிறது. வசனங்கள் ஆங்கிலத்தில் மொழிமாற்றம் (டப்பிங்) செய்யப்பட்டிருக்கின்றன.

#TamilSchoolmychoice

இருப்பினும், படம் முழுக்க சென்னையிலும், தமிழ் நாட்டிலும், இலங்கையிலும் நடைபெறுவது போல காட்டப்பட்டிருக்கிறது. இந்தக் காட்சிகள் அனைத்திலும் கதாபாத்திரங்கள் தமிழிலேயே பேசுகின்றன. ஆங்கிலத்தில் மொழிமாற்றங்கள் காட்டப்படுகின்றன.

இதனால், இந்தி, தமிழ் என மாறி மாறி உரையாடல்கள் இடம் பெற்றுள்ளன.

சமந்தா விடுதலைப் புலி வீராங்கனையாக இந்தியப் பிரதமரைக் கொல்ல முயற்சி செய்பவராகக் காட்டப்படுகிறார். அந்த முயற்சியை இந்திய அரசாங்கத்தின் சிறப்பு உளவுப் பிரிவு தடுத்து நிறுத்த முயற்சி செய்கிறது.

உளவுத் துறை அதிகாரியாக படத்தின் நாயகன் ஶ்ரீகாந்த் திவாரி என்ற பாத்திரத்தில் மனோஜ் பாஜ்பாயி நடித்துள்ளார். அவரின் மனைவியாக பிரியாமணி நடித்திருக்கிறார்.

விடுதலைப் புலிகள் இந்திய அரசாங்கத்தைப் பழிதீர்த்துக் கொள்ள பாகிஸ்தானின் தீவிரவாதிகளுடன் கைகோர்க்கின்றனர் என “தி பேமிலி மேன் -2” திரைக்கதை விவரிக்கிறது.

வைகோ, சீமான் கண்டனங்கள் எடுபடவில்லை

விடுதலைப் புலிகளைத் தவறாகச் சித்தரித்திருப்பதால் “தி பேமிலி மேன் -2” தொடரைத் தடை செய்ய வேண்டும் என பல தமிழர் தலைவர்களும் தமிழ் இயக்கங்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், மதிமுக வைகோ ஆகியோரும் எதிர்ப்புகள் தெரிவித்துள்ளனர்.

மதிமுக பொதுச் செயலாளரும், இந்திய நாடாளுமன்ற மேலவையின் உறுப்பினருமான வைகோ இந்திய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சரான பிரகாஷ் ஜவடேகருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். தி பேமிலி மேன் தொடரைத் தடை செய்ய வேண்டும் என அந்தக் கடிதத்தில் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இந்த எதிர்ப்புக் குரல்கள் அனைத்தும் இரண்டரை நிமிட காணொலியில் காட்டப்பட்டிருந்த காட்சிகளின் அடிப்படையில் முன் வைக்கப்பட்டன.

இருப்பினும், முழுத் தொடரும் இன்று வெளியிடப்பட்டுள்ளதால் இந்த எதிர்ப்புகள் தொடருமா அல்லது அப்படியே அணைந்து போகுமா என்பது இனிமேல் தெரிய வரும்.

இந்தத் தொடர் முழுவதுமே தமிழர்களுக்கு எதிரானது, குறிப்பாக விடுதலைப் புலிகளுக்கு எதிரானது என்ற விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருப்பதால், இந்தத் தொடருக்கான எதிர்பார்ப்புகளும் ஆர்வமும் உலகத் தமிழர்களிடையே அதிகரித்திருக்கின்றன. குறிப்பாக, பல நாடுகளில் பரவிக் கிடக்கும் இலங்கைத் தமிழர்களும் கண்டிப்பாக இந்தத் தொடரைப் பார்க்க ஆர்வம் காட்டுவார்கள்.
இதனால் இந்தத் தொடருக்கு மிகப் பெரிய விளம்பரம் கிடைத்திருக்கிறது.

இந்தத் தொடரை உருவாக்கியிருப்பவர்கள் ராஜ் மற்றும் டி.கே. என்ற இருவர். அண்மையில் இவர்கள் அளித்த ஊடகப் பேட்டியில் வட்டார மொழி பேசுவதற்கும் சண்டைக் காட்சிகளில் நடிப்பதற்கும் சமந்தா பிரத்தியேகப் பயிற்சிகளை மேற்கொண்டார் எனத் தெரிவித்திருக்கிறார்கள்.

அதோடு தங்களின் படைப்புக் குழுவிலும் கதையமைப்புக் குழுவிலும் தமிழர்கள் முக்கியப் பங்காற்றினர் என்றும் அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

“தமிழர்கள் மீதும் அவர்களின் கலாச்சாரம் மீது எங்களுக்கு அன்பும் மரியாதையும் இருக்கிறது. எனவே, முழுத் தொடரையும் பார்த்து முடித்துவிட்டு கருத்து சொல்லுங்கள். அப்போதுதான் எங்களின் கதாபாத்திரச் சித்தரிப்பையும், நடுநிலைக் கண்ணோட்டத்தையும் நிச்சயம் பாராட்டுவீர்கள்” என்றும் இந்தத் தொடரை உருவாக்கியிருக்கும் ராஜ், டிகே இருவரும் தெரிவித்திருக்கிறார்கள்.

தொடர்புடைய செய்தியும் காணொலியும் :