சென்னை : அமேசோன் பிரைம் கட்டண வலைத் திரையின் பிரபலமான இந்திய வலைத் தொடர்களில் ஒன்று “தி பேமிலி மேன்”. மனோஜ் பாஜ்பாயி கதாநாயகனாகவும், அவரின் மனைவியாக பிரியாமணியும் நடித்திருந்தனர்.
தேசிய புலனாய்வு நிறுவனத்தில் பயங்கரவாத ஊடுருவலை முறியடிக்கும் முக்கிய அதிகாரியாக வரும் மனோஜ் பாஜ்பாயி பயங்கரவாதிகளைப் பிடிக்கும் சவால்களை எதிர்நோக்குவதிலும் அதே நேரத்தில் ஒரு குடும்பத் தலைவனாக எதிர்நோக்கும் வீட்டுப் பிரச்சனைகளையும் சுவாரசியமாகவும், நகைச்சுவையாகவும் எடுத்துக் காட்டிய படம் “தி பேமிலி மேன்”.
அந்தத் தொடரின் இரண்டாவது பருவம் (சீசன் 2) இந்த ஆண்டு வெளியாகும் என அமேசோன் அறிவித்ததோடு, அதில் பிரபல நடிகை சமந்தா நடிப்பார் என்றும் அறிவித்தது. அதைத் தொடர்ந்து அந்தத் தொடர் மீதான எதிர்பார்ப்பும், ஆர்வமும் இரசிகர்களிடையே அதிகரித்துக் கொண்டே வந்தது.
எதிர்வரும் ஜூன் 4-ஆம் தேதி “தி பேமிலி மேன்” அமேசோன் பிரைம் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருப்பதோடு, அதற்கான முன்னோட்டமும் வெளியாகியிருக்கிறது.
சென்னையில் நடைபெறுவது போல் அமைக்கப்பட்டிருக்கும் திரைக்கதையில் சமந்தா ஒரு பெண் பயங்கரவாதிபோல சித்தரிக்கப்பட்டிருக்கிறார். அதிலும் அவரின் நடை, உடை, பாவனைகள் ஒரு விடுதலைப் புலி வீராங்கனையைப் போல் ஒத்திருக்கிறது.
வெளியான இரண்டு நாட்களில் 21 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களை ஈர்த்திருக்கிறது “தி பேமிலி மேன்” முன்னோட்டம்.
மேலும் சமந்தாவை விடுதலைப் புலி வீராங்கனை போல் சித்திரித்திருப்பதால் தமிழர்களுக்கு எதிரான கதையைக் கொண்டிருக்கிறதா என்ற கேள்விகளும் சர்ச்சைகளும் தமிழக ஊடகங்களில் எழுந்துள்ளன.
இதன் காரணமாக, “தி பேமிலி மேன்” மிக அதிகமான ஈர்ப்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.